பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்007
1.தமிழ்ப்பெயர் முதுகலை தன்னைச் சுட்டிய
 பெரியோர் மலர்த்தாட் பிரசஞ் சூடி
 யான்சொலத் துவக்கும் இருமூன்று இலக்கணத்து
 எழுத்திலக் கணம்முன் இயம்புவன் சிறிதே.
தமிழ் என்னும் பெயரை உடைய தொன்மையான மொழியின் தன்மையை விளக்கிக் காட்டிய மேலோர்களின் திருவடிகளை வணங்கி யான் கூறப்புகும் இவ்வறுவகையிலக்கணத்துள் முதற்கண் எழுத்தினது இலக்கணத்தைச் சிறிதளவு சொல்வேன் என்றவாறு.
“தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
  எய்த உரைப்பது தற்சிறப் பாகும்”
ஆதலின் இந்நூற்பா எழுத்திலக்கணத்தின் தற்சிறப்புப்பாயிரம் ஆயிற்று.
இலக்கணம் ஆசிரியர்களை மட்டும் பிரித்துக் கூறாது முதுகலை தன்னைச் சுட்டிய பெரியோர் என்றதனானே இலக்கணத்தால் நேரிடையாகப் பெறாதனவற்றையும் சான்றோர் இலக்கியதாற் காட்டிய குறிப்புகளை உட்கொண்டு யான் கூறுவன் என்றாராயிற்று. இவ்வாறு உரைக்காமல், “முதுகலை என்பதனைக் கலையின் இலக்கணத்திற்கு ஆகுபெயராக்கி அதனை விளக்கிய பெரியோர் எனக் கொண்டாலென்னையோ” என்னின் அங்ஙனங்கொண்டால் அஃது இந்நூற் பொதுப் பாயிரத்துட் கூறப்பட்ட “முன்னோர் மொழியைப் பெருக்கிக் குறுக்கி மொழிவதன்றே” என்பதனோடு முரணுதலின் உரையன்று என்க.
“கூட்டும் குறிப்பும் குணிக்கரும் விதமே”1
 “இவ்வாறு உளகூட் டெழுத்தெலாம் மொழியில்
  அடங்கா ஆதலின் அறைகிலம்”2
 “பல்வகைக் குறிப்பும் பகர்ந்திடல் அரிதே”3