‘பரிபாடைச் சூத்திரம்’ என்பனவும் உள. அவை ஈண்டுத்
தந்திரஉத்தியுள்ளே பட்டு அடங்கும் எனக் கொள்க.
இவற்றை விகற்பித்துப் பல படுத்துச் சொல்வாரும் உளர்.
முதற்சூத்திரம் நான்கு வகைப்படும். வழிபடு தெய்வ வணக்கம்
செய்தலும், மங்கல மொழி முதல் வகுத்து எடுத்தலும், தொகை வகை
விரியால் நுதலிப் புகுதலும், சொல்லத்தகும் பொருளை எடுத்து உரைத்தலும்
என.
இனிச் ‘சூத்திரம்’ என்ற சொற்குப் பொருள் உரைக்குமாறு:
‘ஏற்புடைப் பொருளெல்லாம் தோற்று மாறு சூத்திரித்து நடத்தலிற் சூத்திரம் எனப்படும்’.
அது வடமொழித் திரிசொல் எனக் கொள்க. சூத்திரப் பொருள்
உரைக்கின்றுழிப் பல திறத்தானும் உரைப்ப. என்னை?
‘முத்திறத் தானும் மூவிரு விகற்பினும்,
பத்து விதத்தினும் பதின்மூன்று திறத்தினும்
எழுவகை யானும் இரண்டுகூற் றானும்
வழுவுநனி நீங்க மாண்பொடும் மதத்தொடும்
யாப்புறுத் துரைப்பது சூத்திர உரையே.’
என்றாராகலின்.
அவற்றுள் முத்திறமாவன ‘பொழிப்பு, அகலம், நுட்பம்’ என இவை.
மூவிரு விகற்பமாவன, ‘எடுத்துக் காட்டல், பதம் காட்டல், பதம்
விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல்’ என இவை.
பத்து விதமாவன,
‘சொல்லே சொற்பொருள் சோதனை மறைநிலை
இலேசே எச்சம் நோக்கே துணிபே
கருத்தே செலுத்தலென் றீரைங் கிளவியும்
நெறிப்பட வருவது பனுவல் உரையே.’
என்று ஓதப்பட்டன.
|