பக்கம் எண் :
 

 பாயிரம்                                                13

     பதின்மூன்று திறமாவன சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், கொடுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் என இவை.

     எழுவகையாவன, பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், பதப் பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் என இவை.

     இரண்டு கூறாவன, தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்து உரைத்தல் என இவை.

    வழுவாவன,

      ‘குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,
      கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,
      வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்,
      வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல்,
      சென்றுதேய்ந் திறுதல், நின்றுபயன் இன்மை’1

 என இவை.

    மாண்பாவன,

      ‘சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,
      நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல்,
      ஓசை உடைமை, ஆழமுடைத் தாதல்,
      முறையின் வைப்பே, உலகம் மலையாமை,
      விழுமியது பயத்தல், விளங்குதா ரணத்த
      தாகுதல்......2

 என இவை.

    எழுவகை ஆசிரிய மதமாவன.

      ‘உடன்படல், மறுத்தல்,
      பிறர்தம் மதமேற் கொண்டு களைதல்,
      தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே,
      இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
      பிறர்நூற் குற்றம் காட்டல், ஏனைப்
      பிறிதொடு படாஅன் தன்மதம் கொளலே’3

 என இவை.


 1நன். பாயிரம். சூ. 11. 2நன். பாயிரம். சூ. 12. 3நன். பாயிரம். சூ. 10.