பக்கம் எண் :
 

 14                                    யாப்பருங்கல விருத்தி 

     இவ்வகையே புகுந்தன புகுந்தன பரப்பி உரைப்பான் புகில், இகந்து பட்ட உரையிற்றாம், எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளவற்றுள் யாதானும ஒரு வகையாற் கேட்போர் உணர்வு புலன் கொள்ளுமாற்றால் எடுத்துக் கொண்ட சூத்திரப் பொருள் உரைக்க வேண்டும் என்பது ஈண்டுத் துணிபு. அஃது ஆமாறு:

     ‘வெறிகமழ்.....யாப்பே’, என்பது, ‘நறுநாற்றம் கமழும் தாமரைப் பூவின்மேல் நடந்த அறிவனை இறைஞ்சிச் சொல்லுவன் யாப்பு’ என்றவாறு.

     ‘இப்பொருளைச் சொல்லுமோ இச்சூத்திரத் தொடர் மொழி?’ என்னில் சொல்லும். என்னை? ‘வெறி’ என்பது, ‘நறுநாற்றம்’ என்றவாறு; ‘கமழ்’ என்பது, ‘நாறுதல்’ என்றவாறு; அது, ‘வெறிகமழ், சந்தனம்’, ‘வெறிகமழ் துழாய்’ என்றாற்போலக் கொள்க. ‘தாமரை’ என்றது, தாமரைப்பூ’ என்றவாறு; இது ‘முதலிற்கூறும் சினையறி கிளவி.’1

     ‘தாமரை புரையும் காமர் சேவடி’2

 என்றாற் போலக் கொள்க. ‘மீமிசை’ என்பது, ‘மேன்மேல்’ என்றவாறு. ‘மீமிசை’ என்பது, ஒரு பொருட்பன்மொழி சிறப்புப்பற்றி வந்தது. என்னை?

     ‘ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ.’3

 என்றாராகலின், அஃது,

     ‘அடுக்கன் மீமிசை அருப்பம் பேணாது’4

 என்றாற் போலக் கொள்க. ‘ஒதுங்கல்’ என்பது, நடத்தல், அது,

     ‘போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை’5

 என்றாற்போலக் கொள்க. எல்லாப் பொருளையும் ஒருகணத்திற்றானே அறிந்தமையால், ‘அறிவன்’ என்பது காரணக்குறி; ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை. ‘வணங்கி’ என்பது ‘இறைஞ்சி’ என்றவாறு. ‘வணங்கி’ எனினும், ‘இறைஞ்சி’ எனினும், ‘பணிந்து’ எனினும் ஒரு தொழில், ‘அறைகுவன்’ என்பது, ‘சொல்லுவன்’ என்றவாறு. ‘அறைகுவன்’ எனினும், ‘மொழிகுவன்’ எனினும், ‘சொல்லுவன்’ எனினும் ஒக்கும்.


 1 தொல். சொல். வேற். மயங். சூ. 31. 2 குறுந். கட. வாழ். 3 நன். பொது. சூ. 47. 4 மலைபடு. 19. 5 சூளா. இரத. 96.