‘பாவென மொழியினும் தூக்கினது பெயரே.’
என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க.
‘எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோ டியாப்பு’ என்னாது,
‘இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே,’ என்றமையான், ‘அவை முற்றிய
ஆறு உறுப்பிற்று ஆயினும், குற்றமின்றி நடைபெறுவது ‘யாப்பு’ என்று
சிறப்பித்துச் சொல்லப்படுவது, ‘எனக் கொள்க. ‘சிறப்பு என்பது எற்றாற்
பெறுதும்?’ எனின், ‘என’ என்னும் சொல்லாற் பெறுதும். அது சிறப்பினைக்
கூறுமோ?’ எனின், கூறும்; என்னை?
‘நளியிரு முந்நீர் ஏணி யாக’1
என்னும் புறப்பாட்டினுள்,
‘முரசுமுழங்கு தானை மூவி ருள்ளும் அரசெனப் படுவது நினதே பெரும!2
எனவும்,
‘ஆடுகழைக் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே யத்தை.’3
எனவும் சிறப்புப் பற்றிப் புணர்த்தார் சான்றோர் ஆகலானும்,
‘நாடெனப்படுவது சோழநாடு’ ‘ஊரெனப்படுவது உறையூர்’
என்றுபரவை வழக்கினுள்ளும் சிறப்பித்துச் சொல்லுவார் ஆகலானும் எனக்
கொள்க. எனவே, எழுத்துக் குற்றம் முதலாக உடைய செய்யுள் ‘யாப்பு’
என்று கூறப்படாது என்பது பெறப்பட்டதாயிற்று எனக் கொள்க.
அஃதே எனின், ‘எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
இழுக்காதது யாப்பெனப் படுமே,’ என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும்.
‘நடையதி யாப்பு’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின்,
‘வனப்புடைத்’ தொடக்கத்து ஒருசாரனவும் யாப்புறுப்பு’, என்பது
அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவை போக்கி, ‘நிரனிறை’ முதலிய
பொருள்கோட் பகுதியும்’4, என்னும் ஒழிபியற் சூத்திரத்துட் சொல்லுதும்.
1-3. புறம். 35. 4. யா.வி.சூ. 95. பரவை வழக்கு - உலக வழக்கு;
|