உறுப்பியல் - எழுத்தோத்து 19 |
‘நாதன் முதலாக நல்லுறுப் பேழியைந் தேதமில் தன்மை இயலரசாம்; - தாதுக்கள் ஏழும் புணர்ந்த தியாக்கை; எழுத்தாதி ஏழும் புணர்ந்த தியாப்பு.
‘தொல்காப் பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார்; பல்காய னார்பகுத்துப் பன்னினார்;- நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் செற்றார்தம் நூலுள் தொகுத்து.’
இவற்றை விரித்துரைத்துக் கொள்க.
2) அசைக்கு உறுப்பாம் எழுத்தின் வகை
உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா குறிலே நெடிலே அளபெடை யென்றா வன்மை மென்மை இடைமை யென்றா சார்பிற் றோன்றும் தன்மைய வென்றா ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு ஐம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே.
‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களினது
பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : உயிரும், மெய்யும், உயிர்மெய்யும், குறிலும்,
நெடிலும், அளபெடையும், வன்மையும், மென்மையும், இடைமையும், சார்பில்
தோன்றும் இயற்கைய மூன்றும், ஐகாரக் குறுக்கமும், ஒளகாரக் குறுக்கமும்,
மகரக் குறுக்கமும் என்றிப்பதினைந்து திறத்து எழுத்தும் அசைக்கு
உறுப்பாவன (என்றவாறு).
உயிராவன, அகரம் முதல ஒளகாரம் ஈறாய்க் கிடந்த பன்னிரண்டு
எழுத்தும் எனக் கொள்க. என்னை?
‘அகரம் முதல ஒளகரம் ஈறா இசையொடு புணர்ந்த ஈராறும் உயிரே.’
என்பது சங்க யாப்பு ஆகலின்.
குறிப்பு : நாதன்முதலாக நல்லுறுப்பு ஏழு - அரசன், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் அரசியல் உறுப்புகள். தாதுக்கள் ஏழு இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்.
|