பக்கம் எண் :
 

 182                                   யாப்பருங்கல விருத்தி

 இது முதற்சீர்க்கண்ணும், மூன்றாஞ்சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தமையால், பொழிப்பு எதுகை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘ஓங்குமலைத் தொடுத்த தாழ்ந்திலங் கருவி
     செங்குரல் ஏனற் பைங்கிளி இரியச்
     சிறுகுடித் ததும்பும் பெருங்கல் நாடனை
     நல்லன் என்னும் யாமே;
     தீயன் என்னுமென் தடமென் றோளே.’1

 இது முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் மறுதலைப் படத் தொடுத் தமையால், பொழிப்பு முரண்.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘பெருங்கண் கயலே; சீறியாழ் சொல்லே;
     முருந்தம் பல்லே; புருவம் வில்லே;
     மயிலே மற்றிவள் இயலே;
     தண்கதுப் பறலே; திங்களும் நுதலே.’

 இது கடைச்சீர்க்கண்ணும் இரண்டாஞ்சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், பொழிப்பு இயைபு.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘சுறாஅக் கொட்கும் அறாஅ இருங்கழிக்
     கராஅம் கலித்தலின் விராஅல் மீனினம்
     படாஅ என்னையர் வலையேஎ
     கெடாஅ நாமிவை விடாஅம் விலைக்கே.’

 இது முதற்சீர்க்கண்ணும் மூன்றாஞ்சீர்க்கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையாற் பொழிப்பு அளபெடை.

44) ஒரூஉத்தொடை

 சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத்தொடை.

     ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், ஒரூஉத்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : நடு இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற் சீர்க்கண்ணும் நாலாஞ்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது ஒரூஉத்தொடை எனப்படும் (என்றவாறு).


  1 யா. வி. 38 உரைமேற்.