பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              183

     அவை ஒரூஉ மோனை, ஒரூஉ எதுகை, ஒரூஉ முரண், ஒரூஉ இயைபு, ஒரூஉ அளபெடை என வழங்கப்படும்.

     ‘சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉ.’

 என்றாலும் அதிகார வசத்தால் அப்பொருளைப் பயக்கும்;

     ‘இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப.’1

 என்றார் தொல்காப்பியனார் ஆகலானும்,

     ‘சீரிரண் டிடைவிடின் ஒரூஉவென மொழிப.’

 என்றார் பல்காயனார் ஆகலானும்; பெயர்த்தும் ‘தொடை’ என்று சொல்ல வேண்டியது என்னை?’ எனின், தொடை விகற்பம் எல்லாம் நாற்சீர் அடியுள்ளே வழங்கப்படும் என்பது எல்லா ஆசிரியர்க்கும் துணிபென்பது அறிவித்தற்கு ஒரு தோற்றம் உணர்த்தியது எனக் கொள்க.

 வரலாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘புயல்வீற் றிருந்த காமர் புறவிற்
     புல்லார் இனநிரை ஏறொடு புகலப்
     புன்கண் மாலை உலகுகண் புதைப்பப்
     புரிவளைப் பணைத்தோட் குறுமகள்
     புலம்புகொண் டனளாம் நம்வயிற் புலந்தே.’

 இஃது இடை இருசீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க்கண்ணும் கடைச் சீர்க் கண்ணும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால் ஒரூஉ மோனை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘பரியல் யாவதும் பைந்தொடி அரிவை!
     பொரியரை மராஅத்து வாலிணர்ச் சுரிமலர்
     எரியிணர்க் காந்தளோ டெல்லுற விரியும்
     வரிவண் டார்க்கும் நாடன்
     பிரியா னாதல் பேணின்மற் றரிதே.’

 இஃது இடை இரு சீர்க்கண்ணும் இன்றி, முதற்சீர்க்கண்ணும் நான்காஞ்சீர்க் கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், ஒரூஉ எதுகை.


 1 தொல். பொ. 411.