பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              185

45 கூழைத் தொடை

     மூவொரு சீரும் முதல்வரத் தொடுப்பது
     கூழை என்மனார் குறியுணர்ந் தோரே.

     ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், கூழைத் தொடை ஆமாறு உணர்த் துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : கடைச்சீர்க்கண் இன்றி, முதல் மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பின், அவற்றைக் கூழை மோனை, கூழை எதுகை, கூழை முரண், கூழை இயைபு, கூழை அளபெடை என்று சொல்லுவர் புலவர் (என்றவாறு).

 பிறரும்,

     ‘மூன்றுவரிற் கூழை; நான்குவரின் முற்றே.’

 என்றார் ஆகலின்.

 வரலாறு:

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘அருவி அரற்றும் அணிதிகழ்1 சிலம்பின்
     அரக்கின் அன்ன அவிழ்மலர்க் காந்தள்
     அஞ்சிறை அணிவண் டரற்றும் நாடன்
     அவ்வளை அமைத்தோன் அழிய
     அகன்றனன் அல்லனோ அளியன் எம்மே.’ 2

 இது முதல் மூன்று சீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத் தமையால், கூழை மோனை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘பொன்னின் அன்ன புன்னை நுண்டா
     தன்ன மென்பெடை தன்னிறம் இழக்கும்
     பன்மீன் முன்றுறைத் தொன்னீர்ச் சேர்ப்பன்
     பின்னிலை என்வயின் நின்றனன்
     என்னோ நன்னுதல்! நின்வயிற் குறிப்பே?’

 இது கடைச்சீர்க்கண் இன்றி, முதல் மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், கூழை எதுகை.


  பி - ம். 1 அனைதிககழ் 2எமையே