பக்கம் எண் :
 

 உறுப்பியல் - தொடை ஓத்து                              187

 அவை மேற்கதுவாய் மோனை, மேற்கதுவாய் எதுகை, மேற்கது வாய் முரண், மேற்கதுவாய் இயைபு, மேற்கதுவாய் அள பெடை என்று வழங்கப்படும் (என்றவாறு).

     அவை வருமாறு:

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘கணைக்கால் நெய்தல் கண்போல் கடிமலர்
     கருங்கால் ஞாழலொடு கவின்பெறக் கட்டிக்
     கமழ்தார் மார்பன் கவளம் கடிப்பக்
     கங்குல் வந்த கறங்குமணிக் கலிமா
     கடல்கெழு பாக்கம் கல்லெனக் கடுப்பக்
     கங்குல்வந் தன்றாற் கதழ்பரி கலந்தே.’

 இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் மோனை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘கண்டலங் கைதையொடு விண்டன1 முண்டகம்
     தண்டா நாற்றம் வண்டுவந் துண்டலின்
     நுண்டா துறைக்கும் வண்டலந் தண்டுறை
     கண்டனம் வருதல் விண்டன2
     தெண்கடாற் சேர்ப்பனைக் கண்டவெம் கண்ணே.’

 இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் எதுகை.

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘வெளியவும் வெற்பிடைக் கரியவும் செய்யவும்
     ஒளியுடைச் சாரல் இருளவும் வெயிலவும்
     பரியவும் பன்மணி சிறியவும் நிகரவும்
     முத்தொடு செம்பொனும் விரைஇச்
     சிற்றிலும் எங்கள் பேரிலும் நடுவே’.

 இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், மேற்கதுவாய் முரண்.


  பி - ம். 1 விண்ட 2கண்டனவருதல்விண்ட3தெண்டிரைச்