பக்கம் எண் :
 

 188                                   யாப்பருங்கல விருத்தி

[இன்னிசை வெண்பா]

     ‘இருங்கண் விசும்பின்கண் மான்ற1 முகங்காண்
     கருங்கண் முலையின்கண் வேங்கை மலர்காண்
     குறுந்தண் சுனைக்கண் மலர்ந்த உவக்காண்2
     நறுந்தண் கதுப்பினாள் கண்’.

 இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க் கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் இயைபு.

[நிலைமண்டில ஆசிரியப்பா]

     ‘கூஉம் புடைக்கலம் சுறாஅ அறாஅ5
     வறாஅ இடைக்கழி கராஅம் உராஅம்
     ஏஎம் எமக்கள மாஅல்! எனாஅத்3
     தாஅம் சொல்லவும் பெறாஅர் இதோஒ’.

 இஃது இரண்டாம் சீர்க்கண் இன்றி, ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால், மேற்கதுவாய் அளபெடை.

47) கீழ்க்கதுவாய்த் தொடை

     ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது
     கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்.

     ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், கீழ்க்கதுவாய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : மூன்றாஞ்சீர்க்கண் இன்றி, முதல் இரு சீர்க் கண்ணும் கடைச்சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுத்தால், அவை கீழ்க் கதுவாய் மோனை, கீழ்க்கது வாய் எதுகை, கீழ்க்கதுவாய் முரண், கீழ்க் கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் அளபெடை எனப்படும் (என்றவாறு).

     ‘கீழ்க்கதுவாயின் கிழமைய தாகும்’ என்பது ‘கீழ்க்கதுவாய் என்னும் பெயரினை உரிமையாக உடைத்தாம்’ என்றவாறு.

     ‘முடிவதன் முதலயல் கதுவாய் கீழ்மேல்’

 என்றார் பிறரும்


  பி - ம். 1 ஈன்ற 2 உவைக்காண் 5உறாஅ3வேஎமெமக்குள்ளமா அலேநாஆத்