|
[நேரிசை ஆசிரியப்பா]
‘நெடுந்தோட் குறுந்தொடி வீங்குபிணி நெகிழ
அரும்பொருள் எளிதெனச் சென்றவர் வருதல்
சேய்த்தன் றணித்தெனத் தேற்றவும் தேறாய்
அகஞ்சுடப் புறஞ்செவி நிறுத்தனை கிடத்தல்
சின்மொழிப் பல்லிருங் கூந்தல்
பெருந்தகு சீறடி நன்னுதல்! தீதே’
இஃது எல்லாச் சீர்க்கண்ணும் மறுதலைப்படத் தொடுத்தமையால், முற்று
முரண்.
[இன்னிசை வெண்பா]
‘கண்ணும் புருவமும் மென்றோளும் இம்மூன்றும்
வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும்
பல்லும் பகரும் மொழியும் இவையிரண்டும்
முல்லையும் யாழும் இகும்.’
இஃது எல்லாச் சீர்க்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றி வந்தமையால், முற்று
இயைபு.
[நேரிசை ஆசிரியப்பா]
‘குராஅம்? விராஅம் பராஅம்11 உராஅம்
தொழாஅள் எழாஅள் விடாஅள் தொடாஅள்
இதோஒ இதோஒ என்மகள்
எலாஅ! எலா அ! யாங்குற் றனளே?’
இது சீர்தோறும் அளபெடுத்தமையால் முற்று அளபெடை, பிறவும் அன்ன.
‘அவைதாம்,
முதலோ டயல்கொள்வ திணை; அயல் இன்றி
மூன்றாஞ் சீரது பொழிப்பிரண் டிடையிட்
டிறுதியொடு கொள்வ தொருஉ; இறுதிச்
சீரொழித் தேனைய தொன்றிற் கூழை;
முதலீ றடைந்தவற் றின்மை இருவகைக்
கதுவாய்; முற்றும் நிகழ்வது முற்றே;
முதலொடெட் டாகும் என்மனார் புலவர்’.
பி - ம். ? கராஅல் 11 மராஅம்.
|