பக்கம் எண் :
 

 198                                   யாப்பருங்கல விருத்தி

 இவற்றால் அடியும், தொடையும், நிலமும் ஆமாறு உரைத்துக் கொள்க.

     ‘வரம்பில’ என்பார் கருத்து, ஈண்டு உரைத்த பாவும் தொடையும் பிறவாற்றாற் பெருகி வரும் என்பதும், இவ்வாற்றானும் பிறவாற்றானும் உறழப் பெருகும் என்பதும். அவை போக்கி,

     ‘நிரனிறை முதலிய பொருள்கோட் பகுதியும்’1

 என்னும் சூத்திரத்துட் கூறுப

[நேரிசை வெண்பா]

     ‘இணைகூழை முற்றோ டிருகதுவா யுள்ளிட்
     டணையும் தொடையனைத்தும் கூட்டிக் - கணிதநூல்
     வல்லார் தொடைப்பெருமை நோக்கி வரம்பின்மை
     சொல்லார்;மற் றஃதன்றோ தோம்?1

50) செந்தொடை

     செந்தொடை ஒவ்வாத் திறத்தன வாகும்

 ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், நிறுத்த முறையானே செந்தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : செந்தொடை என்பது, மேற் சொல்லப் பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாமை, வேறுபடத் தொடுப்பது (என்றவாறு).

     ‘ஒன்றிய தொடையொடும் விகற்பந் தம்மொடும்
     ஒன்றாது கிடப்பது செந்தொடை தானே.’

 என்றார் சிறுகாக்கைபாடினியார்.

     ‘சொல்லிய தொடையொடு வேறுபட் டியலின்,
     சொல்லியற் புலவரது செந்தொடை என்ப’.2

 என்றார் தொல்காப்பியனார்.

     ‘செந்தொடை ஒவ்வாத் திறந்தன வாகும்’ என்பது: நேரசைக்கு நிரையசை வந்தும், நிரையசைக்கு நேரசை வந்தும், தம்முள் ஒவ்வாதே வந்தும், நிரையசைக்கு நிரையசையே


  1 யா. வி. 95. 2 தொல். பொ. 412

   1சொல்லாய்ந்தார் சொல்லும் தொகை.