|
உறுப்பியல் - எழுத்தோத்து 21 |
‘குறிலோ ரைந்தும் அறிவுறக் கிளப்பின் அஇ உஎ ஒஎனும் இவையே.’
என்பது சங்க யாப்பு ஆகலின்.
நெட்டெழுத்தாவன, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் இவ்வேழும் எனக் கொள்க. என்னை?
‘ஆஈ ஊஏ ஐஓஒளவெனும் ஏழும் நெட்டெழுத் தென்றல் இயல்பே.’
என்பது சங்க யாப்பு ஆகலின்.
‘அஇ உஎ ஒஇவை குறிய மற்றை ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே.’
இஃது அவிநயம்.
‘குற்றெழுத் துத்தொண் ணூற்றைந் தாகும்; நூற்றொடு முப்பத்து மூன்று நெடிலாம்; இருநூற் றிருபத் தெட்டு விரிந்தன உயிரே வன்மை மென்மை இடைமை.’
இஃது அவிநயம்.
அளபெடையாவன, மாத்திரை குன்றலின் சீர் குன்றித் தளைகெட நின்ற விடத்து யாப்பழியாமை பொருட்டு வேண்டப்பட்டன. என்னை?
‘மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின்றளபெடை வேண்டும்.’
என்ப ஆகலின்.
அவ்வளபெடைதான் இரண்டு வகைப்படும்; உயிரளபெடையும்,
ஒற்றளபெடையும் என. என்னை?
‘உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென் றாயிரண் டென்ப அளபெடை தானே.’
என்ப ஆகலின்.
உயிருள் நெட்டெழுத்து ஏழும் அளபெடுக்கும். அவை
அளபெடுக்குமிடத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஐந்தும் தமக்கு இனமாகிய
குற்றெழுத்தினோடு அளபெடுக்கும்.
|