பக்கம் எண் :
 

 22                                    யாப்பருங்கல விருத்தி

 ஐகாரம், இகரத்தோடு அளபெடுக்கும். ஒளகாரம், உகரத்தோடு
 அளபெடுக்கும். என்னை?

     ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
     நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.’1

     ‘ஐஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு
     இகர உகரம் இசைநிறை வாகும்.’2

 என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

     அவ்வளபெடைதான் நான்கு வகைப்படும்: தனிநிலை அளபெடையும், முதல்நிலை அளபெடையும், இடைநிலை அளபெடையும், இறுதிநிலை அளபெடையும் என. என்னை?

     ‘தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென
     நால்வகைப் படூஉமள பாய்வரும் இடனே.’

 என்றார் ஆகலின். அவை வருமாறு:

     (1) ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ - என நெட்டெழுத்து ஏழும் தனிநிலை அளபெடையாய் வந்தவாறு.

     (2) பாஅரி, கீஇரை, கூஉரை, ஏஎரி, தைஇயல், ஓஒரி, ஒளஉவை என ஏழு நெட்டெழுத்தும் முதல்நிலை அளபெடையாய் வந்தவாறு.

     (3) படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇகம், புரோஒசை, மனௌஉகம் - என ஏழு நெட்டெழுத்தும் இடைநிலை அளபெடையாய் வந்தவாறு.

     (4) படாஅ, குரீஇ, கழூஉ, விலேஎ, விரைஇ, நிலோஒ, அனௌஉ - என ஏழு நெட்டெழுத்தும் இறுதிநிலை அளபெடையாய் வந்தவாறு.

     ஒற்றளபெடை போக்கித் ‘தனிநிலை ஒற்றிவை தாமலகிலவே’3 என்னும் சூத்திரத்துட் காட்டுதும்.

 

     1தொல். எழுத்து. சூ. 41, 2தொல். எழுத்து. சூ. 42., 3. யா. வி. சூ.3.     குறிப்பு: பாஅரி - ஒரு வள்ளல், ஓஒரி - ஒரு வள்ளல், படாஅகை - கொடி, பரீஇகம் - மதில், கழூஉமணி - கடைந்து சுத்தஞ்செய்த இரத்தினம், பரேஎரம் - மிக்க அழகு, வளைஇகம் - சூழ்வோம், புரோஒசை - யானைக் கழுத்திடு கயிறு, மனௌஉகம் - (மன+ஓகம்) உள்ளக்கிளர்ச்சி, படாஅ - குட்டிப்பிடவம், குரீஇ - குருவி, கழூஉ - கழுமரம், விலேஎ - வில்லம்பு, விரைஇ, வாசனை, நிலோஒ - நிலாஅனௌஉ - இரக்கக்குறிப்புபோலும், அவ்வே - அவையே.