பக்கம் எண் :
 

 222                                   யாப்பருங்கல விருத்தி

II செய்யுள் இயல்

54) செய்யுட்களின் வகை

     செய்யுட் டாமே மெய்பெற விரிப்பின்
     பாவே பாவினம் எனவிரண் டாகும்.

     ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோ?’ எனின், தொடையினானும்
 அடியினானும் செய்யுள் உணர்த்திற்று ஆகலான், ‘செய்யுள் ஓத்து’ என்னும்
 பெயர்த்து.

     ‘இவ்வோத்தினுள் இச்சூத்திரம் என் நுதலிற்றோ?’ எனின் செய்யுட்களது
 பெயர் வேறுபாடும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு: செய்யுள் எனப்படுவனதாம், பொருள் பெற விரிக்குங்
 கால், பாவும் பாவினமும் என்று இரண்டு திறத்தனவாம் (என்றவாறு).

     ‘தாம்’ என்பது, செய்யுட்களைச் சிறப்பித்தற்குச் சொல்லப்பட்டது;
 ‘தேவர் தாமே தின்னினும், வேம்பு கைக்கும்’ என்றாற் போலக் கொள்க.
 அவ்வாறு சிறப்பிக்கவே, சொற்பொருள் உணர்வு வண்ணங்கள் தொடர்ந்து,
 குற்றமின்றி அவை தத்தமுள் தழுவும்கோள் உடையவாய், இன்பம் பெருக்கி,
 அம்மை முதலாகிய வனப்பு அலங்காரமும் செம்மையும் செறிவும் பெறுவுழிப்
 பெற்று, இம்மை மறுமைக்கு நன்மை பயந்து, எல்லார்க்கும் புலனுற நடை
 பெறுவது, ‘யாப்பு, பாட்டு, செய்யுள்’ என்று சொல்லப்படுவது ஆயிற்று.
 எனவே, ‘செய்யுள்’ எனப் பெயர் பெற்றும், ஓசைப் பொலிவு முதலாகிய
 உறுப்பொடு, புணர்ந்து, உரையும் நூலும் வகையும் மந்திரமும் முதுசொல்லும்
 பிசியும் ஆகிய செய்யுள் அல்ல. ஈண்டு வேண்டப்படும் செய்யுள் என்பதூ
 உம் சொல்லப்படும் எனக் கொள்க.

     ‘மெய் பெற’ என்று மிகுத்துச் சொல்லிய அதனால், செய்யுட்கள் இடத்
 தினானும், தொழிலினானும், பொழுதினானும், பிறவாற்றானும் பெயர் பெற்று
 நடப்பனவும் உள எனக் கொள்க.


  1 நாலடி 112.