|
என்பது கடியநன்னியார்1 செய்த கைக்கிளைச் சூத்திரம் ஆகலின்.
‘புறநிலை வாயுறை செவியறி வவையடக்கு
எனவிவை வஞ்சி கலியவற் றியலா’.
அவற்றுள்,
இடையிரு செய்யுளும் கைக்கிளைப் பாட்டும்
கடையெழு சீரிரண் டகவியும் வருமே’.
என்றார் நல்லாறனார்
[தரவு கொச்சகம்]
‘வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும்
நீதியாற் சேர நிகழ்ந்த நெடுங்குலம்போல்
ஆதிசால் பாவும் அரசர் வியன்பாவும்
ஓதியவா றொன்ற மருட்பாவாய் ஓங்கிற்றே’.1
எனவும்,
[கட்டளைக் கலித் துறை]
‘பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறை வாழ்த்
தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை ஊனமில்லா
வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
வண்பால் மொழிமட வாய்! மருட் பாவெனும் வையகமே’.2
எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க.
‘கங்கை யமுனைகளது சங்கமம் போலவும், சங்கர நாராயணரது சட்டகக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கண்மேல் யாப்புற்று மருட்சியுடைத்தாகப் பாவி நடத்தலின், ‘மருட்பா’ என்று வழங்கப்படும், என்பாரும் உளர்.
இனி, ஒருசார் ஆசிரியர், வெண்பாவும் ஆசிரியப் பாவும் ஒத்து வருவன வற்றைச் ‘சம மருட்பா’? என்றும், ஒவ்வாது வருவனவற்றை ‘வியன் மருட்பா’5 என்றும் பெயரிட்டு வழங்குவர்.
1 யா. வி. உரை மேற். 2. யா.கா. 36.
பி - ம்.1கடிய நன்னீயார் ? சமநிலை மருட்பா 5வியநிலைமருட்பா
|