பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         269

[கட்டளைக் கலித்துறை]

     அந்தமில் பாதம் அளவிரண் டொத்து முடியின்வெள்ளைச்
     செந்துறை ஆகும் திருவே! அதன்பெயர்; சீர்பலவாய்
     அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபுமங்கேழ்
     சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே’.1

 இக் காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.

65) குறட்பாவின் இனம்

     உரைத்தன இரண்டும் குறட்பா இனமே.

     இச்சூத்திரம், வெண்செந்துறையும் குறட்டாழிசையும் இன்ன பாவின் இனம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : இங்ஙனம் சொல்லப்பட்ட செந்துறை வெள்ளையும் தாழிசைக் குறளும், குறள் வெண்பாவின் இனம் (என்றவாறு).

     பிறரும் இவற்றிற்கு இலக்கணச் சூத்திரம் சொல்லிப் பின்னையும்,

     ‘கூறிய இரண்டும் குறட்பா இனமே’.

 என்றார் எனக் கொள்க.

     செந்துறை வெள்ளையும் தாழிசைக் குறளும் ஏழு தளையாலும் கூறுபடுப்ப, இரண்டுமாய்ப் பதினான்கு செய்யுளாம்; சிறப்புடைத் தளையும் சிறப்பில் தளையும் என்றிவ் வாற்றாற் கூறபடுப்ப, இருபத்தெட்டாம்; மற்றும் விகற்பிக்கப் பலவுமாம்.

     வெண்பாவிற்கு இனமாய், செவ்விதாய், ஒழுகிய ஓசைத்தாய், விழுமிய பொருளை உள்புக்குத் துறைபோய நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலின், ‘வெண்செந்துறை’ என்பதூஉம், ‘செந்துறை வெள்ளை’ என்பதூஉம் காரணக் குறி.

     இரண்டடியாம் நேரடித்தாய்த் தாழ்ந்திசைத்தலானும், ஒழுகலோசை யினும் செப்பலோசையினும் வழுவித் தாழ்ந்த ஓசைத்தாகலானும், விழுப்பமின்றித் திண்ணியதாகிய பொருளைச் சொல்லுதலானும் ‘குறட்டா ழிசை’ என்பதூஉம், ‘தாழிசைக் குறள்’ என்பதூஉம் காரணக்குறி.


  1 யா. கா. 27.