பக்கம் எண் :
 

 274                                   யாப்பருங்கல விருத்தி

     புல்லாதார் பொய்க்கேண்மை புனைந்துரைத்தால் ஆவதென்னே?
     அல்லாதார் பொய்யாவ தறிபவேல் அமையாதோ?’

 இஃது ஐந்தடியாய், ஈற்றடி இரண்டும் சீர் குறைந்து வந்த வேற்றொலி வெண்டுறை.

     ‘முழங்கு களியானை மூரிக் கடற்படை முறித்தார் மன்னர்
     வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
     செழுந்தண்பூம் பழைசையுட் சிறந்துநா ளுஞ்செய
     எழுந்தசே திகத்துள் இருந்தவண் ணல்லடி
     விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
     தொடர்ந்துநின் றவ்வினை துறந்துபோ மாலரோ’.

 இஃது ஆறடியாய், முதலடி இரண்டும் அறுசீராய், பின் நான்கடியும் நாற்சீராய், முதலிரண்டடியும் ஓர் இசையாய், பின் நான்கடியும் மற்றோர் இசையாய் வந்தமையால், வேற்றொலி வெண்டுறை எனப்படும்.

     ‘முழங்குதிரைக் கொற்கை வேந்தன்
        முழுதுலகும் ஏவல்செய முறைசெய்கோமான்
     வழங்குதிறல் வாள்மாறன் மாச்செழியன்
        றாக்கரிய வைவேல் பாடிக்
     கலங்கிநின் றாரெலாம் கருதலா காவணம்
        இலங்குவாள் இரண்டினால் இருகைவீ சிப்பெயர்ந்
     தலங்கல்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள்
        புலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம்
     விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே’.

 இஃது ஏழடியாய், முதலிரண்டடியும் அறுசீராய், ஓரோசையால் வந்து, பின் ஐந்தடியும் நாற்சீராய், வேறோர் ஓசையால் வந்த வேற்றொலி வெண்டுறை.

 அல்லது பிறரும் சொன்னார். என்னை?

     ‘அடியைந் தாகியும் மிக்கும் ஈற்றடி
     ஒன்றும் இரண்டும் சீர்தப வரினும்
     வெண்டுறை என்னும் விதியின வாகும்’.

 என்றார் காக்கைபாடினியார்.