பக்கம் எண் :
 

 284                                   யாப்பருங்கல விருத்தி

     இது மொழி மாற்றுச் சூத்திரம், ‘எவ்வாறோ?’ எனின், ‘நிலைப் பெயர் ஆகும் மண்டிலம்’ என்றவழி, ‘நிலை’ என்பதனையும் ‘மண்டிலம்’ என்பதனையும் கூட்டி ‘நிலை மண்டிலம்’ என்றும், பின்னை ‘அகவல்’ என்பதனையும் ‘பெயர் என்பதனையும் ‘நான்கு’ என்பதனையும் ‘ஆகும்’ என்பதனையும் கூட்டி, ‘அகவற் பெயர் நான்காகும்’ என்றும் கொள்க.

     மிக்க புகழும் சொல்லும் ஓசையும் உடைத்தாகலினால், ‘நேரிசை’ என்பதூஉம் காரணக்குறி.

     இணைந்து குறைந்த அடியுடைத்தாகலின், இணைக் குறள் என்பதூஉம் காரணக்குறி.

     எல்லா அடியும் முதல் நடு இறுதியாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் ஒத்து வருதலின், ‘அடி மறி மண்டிலம்’ என்பதூஉம் காரணக்குறி.

     ஒரு பெற்றியே நின்று எல்லா அடியும் ஒத்து நடத்தலின், ‘நிலை மண்டிலம்’ என்பதூஉம் காரணக்குறி.

 என்னை?

     ‘நேரிசை இணைநிலை மண்டிலம் மண்டிலம்
     ஈரிரண் டியல எண்ணுங் காலை’.

 என்றார் பிறரும்.

     மூன்று அகவல் ஓசையானும் நான்கு ஆசிரியப்பாவையும் உறழப் பன்னிரண்டாம். நான்கு ஆசிரியப்பாவினையும் ‘சிறப்புடை ஏழ்தளை, சிறப்பில் ஏழ்தளை’ எனக் கூறுபடுப்ப, ஐம்பத்தாறாம். அவை ஓசையும் தளையும் கூட்டி உறழ, நூற்றுஅறுபத்தெட்டாம்.

     ‘பெயர்’ என்ற விதப்பு என்னை? எனின், ஒருசார் ஆசிரியர் வேற்றடி விரவி வந்த ஆசிரியங்களை ‘விரவியல் ஆசிரியம்’ என்றும், விரவாதனவற்றை ‘இன்னியல் ஆசிரியம்’ என்றும் சொல்லுவர் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க.

     நான்கு ஆசிரியத்தினையும் இவ்விரு பெயராற் கூறுபடுப்ப, எட்டாம். அவை ஓசையும் தளையும் கூட்டி உறழ, முந்நூற்று முப்பத்தாறாம். பிறவாற்றான் விகற்பிக்கப் பலவாம்.