பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         285

71) (நேரிசை ஆசிரியப்பா)

     ‘அந்த அடியின் அயலடி சிந்தடி
     வந்தன நேரிசை ஆசிரி யம்மே’.

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், மேல் அதிகாரம் பாரித்த நான்கனுள் நேரிசை ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : அந்த அடியின் அயல் அடி - ஈற்றடியின் மேலை யடி, சிந்தடி வந்தன - முச்சீரடியான் வந்தன, நேரிசை ஆசிரியம்மே - நேரிசை ஆசிரியப்பா எனப்படும் (என்றவாறு).

     வரலாறு :

[நேரிசை ஆசிரியப்பா]

     ‘சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
     கான யானை அணங்கி யாஅங்கு
     இளையள் முளைவாள் எயிற்றள்
     வளையுடைக் கையளெம் அணங்கி யோளே’.1

 இது தூங்கிசை அகவற் சிறப்புடை இயற்சீரான் வந்த நேரிசை ஆசிரியப்பா. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

     ‘சிந்து வந்தன’ என்னாது, பெயர்த்தும் ‘அடி’ என்றது என்னை? ‘கைக்கிளைப் பொருளை மேல் ஆசிரியம் வருவுழி எருத்தடி முச்சீரான் வரப் பெறாது’, என்பர் கடியநன்னியார் என்பது அறிவித்தற்கு எனக் கொள்க. என்னை?

     ‘கைக்கிளை ஆசிரியம் வருவ தாயின்,
     முச்சீர் எருத்தின் றாகி, முடிவடி
     எச்சீ ரானும் ஏகாரத் திறுமே’.2

 என்றாராகலின்.

     ‘இற்றதன் மேலடி ஒருசீர் குறைய
     நிற்பது நேரிசை ஆசிரி யம்மே’.

 என்றார் அவிநயனார்.

     ‘இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி
     பெறுவன நேரிசை ஆசிரி யம்மே’.

 என்றார் சிறுகாக்கைபாடினியார்.


  1 குறுந். 119. 2. இது கடிய நன்னியார் சூத்திரம்.