பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                         299

     ‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், ஆசிரிய விருத்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொழிப்பு : கழிநெடில் அடி நான்காய்த் தம்முள் அளவொத்து முடியின், அஃது ஆசிரிய விருத்தமாம் (என்றவாறு).

     ‘அழியா மரபினது அகவல்’ என்று ஆசிரியப்பாவினைச் சிறப்பித்துச் சொல்ல வேண்டியது என்னை?

     ஒருசார் ஆசிரியர், ‘அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல், உறுப்பின் அகவல், ஏந்திசை அகவல் என்று ஆறு விகற்பிற்று அகவல் ஓசை’, என்பர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை?

     ‘அகவல் ஆறும் வெண்பா மூன்றும்
     பண்புறத் தெரியும் பகுதிய; மற்றது
     நன்றறி புலவர் நாட்டினர் என்ப’.

 எனவும்,

     ‘ஆறு வகையின் அகவலொடு கொள்ளாது
     வேறுபட வரினது வெண்பா ஆகும்’.

 எனவும்,

     ‘அவைதாம்,
     அகப்பா அகவல், புறப்பா அகவல்,
     நூற்பா அகவல், சித்திர அகவல்
     உறுப்பின் அகவல், ஏந்திசை அகவலென்
     றவ்வா றென்ப அறிந்திசி னோரே’.

 எனவும் சொன்னாராகலின்.

 அவற்றுள் அகப்பா அகவலாவன, அகப் பொருளைத் தழுவி, ஐயீருறுப் பினவாய், வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா எல்லாம் எனக் கொள்க. என்னை?

     ‘அகப்பா அகவல்,
     ஐயீ ருறுப்பின் ஆசிரி யம்மே’.
     ‘அவைதாம்,
     முன்னும் பின்னும் தூங்கல் இன்றிச்
     சென்னெறி மருங்கிற் சென்றிசைக் கும்மே’.

 என்றாராகலின்.