அவற்றுட் சூத்திரமாவது, கருதிய பொருளைக் கைக் கொண்டு
கண்ணாடியில் நிழல் போலத் தெரிவுறத் தோன்றச் செய்யப்படுவது.
என்னை?
‘அவற்றுள், சூத்திரந் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே.’1
என்றாராகலின்.
ஓத்தாவது, ஒப்புடைப் பொருளை ஓரிடத்துள் ஒற்றுமைப்பட வைப்பது
ஆகும். என்னை?
‘நேரின மணியை நிரல்பட வைத்தாங் கோரினப் பொருளை ஒருவழி வைப்ப தோத்தென மொழிப உயர்மொழிப் புலவர்.’2
என்றாராகலின்.
படலமாவது, வேற்றுமையுடைய பல பொருள்களால் தோற்றம
உடைத்தாகத் தொடர வைப்பது. என்னை?
‘ஒருநெறி இன்றி விரவிய பொருளாற் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும்.’3
என்றாராகலின்.
பிண்டமாவது, உறுப்பு மூன்றும்* உள்ளடக்கி, நெறிப்பாடு உடைத்தாய்க்
கிடப்பது. என்னை?
‘மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர்அது பிண்டம் என்ப.’4
என்றாராகலின்.
இனி, நூலின் விகற்பம் உரைக்குமாறு: நூல் முத்திறப்படும்: முதல்
நூலும், வழி நூலும், சார்பு நூலும் என. என்னை?
‘முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்’5 என்றாராகலின்.
1தொல். பொ. செய். சூ. 169., 2தொல். பொ. செய். சூ. 170., 3தொல். பொ.
செய். சூ. 171, 4தொல். பொ. செய். சூ. 172, 5நன். பாயிரம், சூ. 6
குறிப்பு- *
உறுப்பு மூன்று - சூத்திரம், ஓத்து, படலம் என்பவை.
|