|
வைத்தவழி முறையால் வண்ணக இறுவாய்
மயங்கி வந்தவும் இயங்குநெறி முறைமையிற்
கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்’.
என்றார் காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்.
‘எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும்,
இடைநிலை எருத்துடைத் தாயும்,
எருத்தம் இரட்டித் திடைநிலை பெற்றும்,
இடைய திரட்டித் தெருத்துடைத் தாயும்,
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்,
எருத்தம் இரட்டித் திடைநிலை ஆறாய்
அடக்கியல் காறும் அமைந்த உறுப்புக்
கிடக்கை முறைமையிற் கிழமைய தாயும்,
தரவொடு தாழிசை அம்போ தரங்கம்
முடுகியல் போக்கியல் என்றிவை எல்லாம்
முறைதடு மாற மொழிந்தவை யின்றி
இடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப் பில்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும்’.
என்றார் காக்கைபாடினியார்.
இனி ஒரு சார்க் கொச்சகங்களை ‘ஒரு போகு’ என்று வழங்குவாரும்
உளர்.
மயேச்சுரராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும்
என்றிரண்டு தேவ பாணியும் திரிந்து, தரவு ஒழிந்து அல்லா உறுப்புப்
பெறினும், தாழிசை ஒழிந்து அல்லா உறுப்புப் பெறினும்,
அம்போதரங்கத்துள் ஓதப் பட்ட மூவகை எண்ணும் நீங்கினும்,
வண்ணகத்துக்கு ஓதப்பட்ட இரு வகை எண்ணும் நீங்கினும்,
நீங்கிய உறுப்பு ஒழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன
‘ஒரு போகு’ எனப்படும்.
அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயின ‘அம்போதரங்க ஒரு
போகு’ எனவும், வண்ணக உறுப்புத் தழீஇயின ‘வண்ணக ஒரு போகு’
எனவும் படும். என்னை?
|