பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        367

[கலியொத்தாழிசை]

     ‘கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
     பொய்தற் சிறுகுடி1 வாரல்நீ ஐய! நலம்வேண்டின்;                1
     ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
     ஆசில் சிறுகுடி? வாரல்நீ ஐய! நலம்வேண்டின்;                  2

     ‘மென்றினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
     குன்றச் சிறுகுடி? வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’.                 3

     இவை இரண்டடியாய், ஈற்றடி மிக்கு, ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்தமையால், கலியொத்தாழிசை எனப்படும்.

[சிறப்புடைக் கலித்தாழிசை]

     ‘வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறியெம்
     கேள்வரும் போழ்தின் எழால்வழி வெண்டிங்காள்!
     கேள்வரும் போழ்தின் எழாதாய்க் குறாலியரோ
     நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்!’

     இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, ஏனையடி தம்முள் ஒத்து வந்தமையால், சிறப்புடைக் கலித்தாழிசை எனப்படும்.

[சிறப்பில் கலித்தாழிசை]

     ‘நிலமகள் கேள்வனும் நேர்கழலி னானும்
     நலமிகு கச்சியார் கோவென்பவே;
     நலமிகு கச்சியார் கோவாயி னானும்
     சிலைமிகு தோட்சிங்கன் அவனென்பவே;
     செருவிடை யானை அவனென்பவே’.

 எனவும்,

     ‘பூண்ட பறையறையப் பூதம் மருள
     நீண்ட சடையான் ஆடுமே;
     நீண்ட சடையான் ஆடும் என்ப
     மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே’.

 எனவும் இவை ஒரு பொருண்மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண்டாமடி குறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்த சிறப்பில் கலித்தாழிசை.


  பி - ம். 1 சிறுகுடில்