|
பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
‘கலியொத்தாழிசை, கலித்தாழிசை’ என்று வேறுபடாதே அவற்றை
கலித்தாழிசை என்று வழங்கவும் அமையும்.
இவற்றை எல்லாம் விகற்பித்து, ‘சிறப்புடைக் கலியொத்தாழிசை,
சிறப்பில் கலியொத்தாழிசை, சிறப்புடைக் கலித்தாழிசை, சிறப்பில்
கலித்தாழிசை’ என்று கூறுபடுப்ப நான்காம். அவை சிறப்புடைத்
தளை யானும், சிறப்பில் தளையானும் கூறுபடுப்ப நோக்க, ஐம்பத்தாறாம்.
அவை எல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க.
‘அந்தடி மிக்குப் பலசில வாயடி
தந்தமில் ஒன்றிய தாழிசை ஆகும்’.
என்றார் காக்கைபாடினியார்.
‘அந்த அடிமிக் கல்லா அடியே
தந்தமுள் ஒப்பன கலித்தா ழிசையே’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
‘ஈற்றடி மிக்கள வொத்தன வாகிப்
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்துத் தாழிசை ஆகும்’.
என்றார் அவிநயனார்.
‘அடிபல வாகியும் கடையடி சீர்மிகிற்
கடிவரை யில்லைக் கலித்தா ழிசையே’.
என்றார் காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர்.
88) கலித்துறை
‘நெடிலடி நான்காய் நிகழ்வது கலித்துறை’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், கலித்துறை ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இதன் பொழிப்பு : ஐஞ்சீர் அடி நான்காய் நடப்பது கலித்துறை
எனப்படும் (என்றவாறு).
‘நெடிலடி நான்காயது கலித்துறை’ என்னாது, ‘நிகழ்வது’ என்று
மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?
|