பக்கம் எண் :
 

 368                                   யாப்பருங்கல விருத்தி

     அடி மறியாய் ஐஞ்சீர் நாலடியால் வருவனவற்றை, ‘கலி மண்டிலத் துறை’ என்றும், அடி மறி ஆகாதே ஐஞ்சீர் நாலடியால் வருவனவற்றைக் ‘கலி நிலைத்துறை’ என்றும் வழங்கப்படும் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

     அவை வருமாறு:

[கலி மண்டிலத் துறை]

     ‘மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளைக்கும்;
     தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்;
     தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்;
     சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்’.

     இஃது அடிதோறும் பொருள் முடிந்து, அடி மறியாய், ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலிமண்டிலத் துறை எனப்படும்.

[கலி நிலைத் துறை]

     ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித்
     தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்,
     தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
     கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே?’1

     இஃது அடி மறி ஆகாதே ஐஞ்சீர் அடியான் வந்தமையால், கலி நிலைத் துறை எனப்படும்.

     பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

     இவை பதினாலு தளையாற் கூறுபடுத்து நோக்க, இருபத்தெட்டுத் துறையாம் போலும் எனக் கொள்க.

     ‘ஐஞ்சீர் முடிவின் அடித்தொகை நான்மையொ
     டஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை’.

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘ஐஞ்சீர் நான்கடி கலித்துறை ஆகும்’

 என்றார் அவிநயனார்.


  1. யா. வி. 28, 95 உரைமேற்.