|
89) கலி விருத்தம்
‘அளவடி நான்கின கலிவிருத் தம்மே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், கலி விருத்தம் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : நாற்சீரால் ஆகிய நான்கடி உடையன எல்லாம்
கலி விருத்தம் எனப்படும் (என்றவாறு).
‘அளவடி நான்கின கலிவிருத் தம்மே’.
என்றவழி ஏகார விதப்பினால், அடி மறியாய், நாற்சீர் நாலடியால் வருவன
கலி மண்டில விருத்தம் என்றும்; அடிமறி ஆகாதே நாற்சீர்
நாலடியால் வருவன கலி நிலை விருத்தம் என்றும் வழங்கப்படும் எனக்
கொள்க.
வரலாறு :
[கலி மண்டில விருத்தம்]
‘இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி;
வெந்திறல் ஞாயிற்றெழில் வீவிலொளி வெல்லுமடி;
மந்திரத்தின் ஓதுமடி மாதுயரம் தீர்க்குமடி;
அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையி னங்கணடி’.
இஃது அடி மறியாய் நிற்றலின், கலி மண்டில விருத்தம் என்று
வழங்கப்படும் எனக் கொள்க.
[கலி நிலை விருத்தம்]
‘விரிகதிர் மதிமுக மடநடை கணவனொ
டரியுறு கொழுநிழல் அசையின பொழுதினில்
எரிதரு தளிர்சினை இதழ்மிசை உறைவோன்
தரவிலன் எனின்மனம் உரைமினம் எனவே’.
இஃது அடி மறி ஆகாதே நின்றவாறே நின்று பொருள் பயத்தலின்,
கலி நிலை விருத்தம் என்று வழங்கப்படும்.
இவை பதினாலு தளையாற் கூறபடுத்து நோக்க, இருபத்தெட்டு
விருத்தமாம். அவை எல்லாம் வந்த வழிக் கண்டு கொள்க.
‘அளவடி நான்கின’ என்று பன்மை சொல்லிய அதனால், கலி
ஒலி வழுவாது நாற்சீர் நாலடியான் வருவன எல்லாம் தரவுக் கொச்சகக்
கலிப்பா என்று வழங்கப்படும் எனக் கொள்க.
|