|
வரலாறு :
‘செல்வப்போர்க் கதக்கண்ணன்’1 என்பது கலித்தளையான்
வந்தது.
‘நாற்சீர் நாலடி வருவ தாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத் தம்மே’,
என்றார் அவிநயனார்.
‘ஐஞ்சீர் நாற்சீர் அடிநான் காயின்
எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்’.
என்றார் மயேச்சுரர்.
‘நாலொரு சீரால் நடந்த அடித்தொகை
ஈரிரண் டாகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத் தம்மே’.
என்றார் காக்கைபாடினியார்.
‘நாற்சீர் நாலடி கலிவிருத் தம்மே’.
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
கலிக்கு இனமாகிய, ‘தாழிசை, துறை, விருத்தம்’ என்னும்
மூன்றினுள்ளும் ஒரு பொருண் மேல் மூன்றாய் வரும் தாழிசையை
ஒருபுடை ஒப்புமை நோக்கி, ஒரு பொருண்மேல் மூன்றாய் வரும்
தாழிசையைச் சிறப்புறுப்பாக உடைய ஒத்தாழிசைக் கலிப்பாவின்
இனம் என்றும்; ஒரு பொருண் மேல் ஒன்றாயும், இரண்டாயும்,
மூன்றின் மிக்கும் வரும் தாழிசையை மிக்கும் குறைந்தும் கிடத்தல்
என்னும் ஒப்புமை நோக்கி, கொச்சகக் கலிப்பாவின் இனம் என்றும்; ஐஞ்சீர்
அடி கொச்சகத்துள் அருகி வரும் ஆகலின், அவ்வொப்புமையால் கலித்
துறையையும் கொச்சகக் கலிப்பாவின் இனம் என்றும்; விருத்தம் நாற்சீர்
நாலடியால் வருதலின், கலி வெண்பாவின் இனம் என்றும் அவற்றால்
ஒருபுடை ஒப்புமை நோக்கிப் பாச்சார்த்தி வழங்கப்படும் எனக் கொள்க.
[கட்டளைக் கலித்துறை]
‘அடிவரை யின்றி அளவொத்தும் அந்தடி நீண்டிசைப்பின்
கடிதலில் லாக்கலித் தாழிசை யாகும்; கலித்துறையே
நெடிலடி நான்காய் நிகழ்வது; நேரடி ஈரிரண்டாய்
விடினது வாகும் விருத்தம் திருத்தகு மெல்லியலே!’2
இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க.
கலிப்பாவும் அதன் இனமும் முடிந்தன.
1. யா. வி. 15, 20, 32, 78, 80 உரைமேற். 2. யா. கா. 34
|