‘உணர்த்திய பாவினுள் ஒத்த அடிகள்
வகுத்துரை பெற்றியும் அன்றிப் பிறவும்
நடக்குந ஆண்டை நடைவகை யுள்ளே’.
என்றார் காக்கைபாடினியார்.
‘ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும்
மிக்கடி வரினும் அப்பாற் படுமே’,
என்றார் அவிநயனார்.
‘பாவும் இனமும் மேவிய அன்றியும்
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறறி புலவர் அறிந்தனர் கொளலே’.
என்றார் பிறை நெடுமுடிக் கறைமிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்.
[ஆரிடச் செய்யுள்]
‘வரிசை பெரிதுடையர் கட்கலமுந் தூயர்
புரிசை ஒருசாரார் அம்பலமும் தண்ணீரும்
தன்னிலத்த அல்ல - புரிசைக்குத்
தெற்கொற்றித் தோன்றும் திருநென் மலியேநம்
பொற்கொற்றி புக்கிருக்கும் ஊர்’.
எனவும்,
‘கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத்
தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார் - கிடங்கில்
வளையாற் பொலிந்ததோள்1 வையெயிற்றுச் செவ்வாய்
இளையாட்டி 2 கண்ணொக்கும் என்று’.
எனவும்,
‘வஞ்சி வெளிய குருகெல்லாம்; பஞ்சவன்
நான்மாடக் கூடலிற் கல்வலிது;
சோழன் உறந்தைக் கரும்பினிது; தொண்டைமான்
கச்சியுட் காக்கை கரிது’.
எனவும் வரும் இத் தொடக்கத்துப் பொய்கையார் வாக்கும்,
குடமூக்கிற்பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம் முதலாகிய ஒருசார்ச்
செய்யுட்களும் எப்பாற்படுமோ எனின், ஆரிடச் செய்யுள் எனப்படும்.
பி - ம். 1 பொலிந்தகை 2 இளையாடன்.
|