பக்கம் எண் :
 

 392                                   யாப்பருங்கல விருத்தி

     கொற்றக் குடையெடுப் பித்துநிலம் தெளியப்
     படைபரப்பி ஆங்காங்குக் களிறி யாத்து
     நாடுவளம் பெருகக் கிளைகுடி ஓம்பி
     நற்றாய் போல உற்றது பரிந்து
     நுகத்துக்குப் பகலாணி போலவும்
     மக்கட்குக் கொப்பூழ் போலவும்
     உலகத்துக்கு மந்தரமே போலவும்
     நடுவு நின்று செங்கோல் ஓச்சி
     யாறில்வழி யாறு தோற்றியும்
     குளனில்வழிக் குளந்தொடு வித்தும்
     முயல்பாய்வழிக் கயல்பாயப் பண்ணியும்
     களிறு பிளிற்றும்வழிப் பெற்றம்பிளிற்றக் கண்டும்
     களிறூர் பலகாற் சென்றுதேன் றோயவும்
     தண்புனற் படப்பைத் தாகியும்
     குழைகொண்டு கோழி எறிந்தும்
     இழைகொண் டான்றட்டும்
     இலக்கங் கொண்டு செங்கால் நாரை எறிந்தும்
     உலக்கை கொண்டு வாளை ஓச்சியும்
     தங்குறை நீக்கிப் பிறர்குறை திருத்தி
     நாடாள்வதே அரசாட்சி’.

 என இத்தொடக்கத்தனவும், பாசாண்டங்களும், ஒருசார்ச் சொற்கட்டும், கரிப்போக்கு வாசகத்து ஒரு சார்ச் சொற்கட்டும், எப்பாற்படும் எனின், அவையெல்லாம் ‘சொற்சீர் அடி’ எனப்படும் எனக் கொள்க. என்னை?

     ‘கட்டுரை வகையால் எண்ணொடு புணர்ந்தும்
     முற்றடி இன்றிக் குறைசீர்த் தாகியும்,
     ஒழியிசை யாகியும், வழியசை புணர்ந்தும்,
     சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே’.1

 என்பது இலக்கணம் ஆகலின்.

செய்யுள் இயல்

முடிந்தது.


  1 யா. வி. 29 உரைமேற், தொல். செய். 123