III. ஒழிபு இயல்
94) தனிச்சொல் நிற்கும் இடம்
‘அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல்; அஃ
திறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், மேற்சொல்லப்பட்ட பாக்கட்குத்
தனிச்சொல் நிற்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொழிப்பு : அடி முதற்கண் செய்யுளகத்துப் பொருளைத்
தழீஇத் தனியே நிற்பது, ‘தனிச்சொல்’ எனப்படும்; அது வஞ்சிப்பாவின்
ஈற்றின் கண்ணும் வரப்பெறும் என்பர் புலவர் (என்றவாறு).
‘இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப’ என்னும் உம்மையால்,
தனிச்சொல் இடையும் வஞ்சியுள் நிற்கப் பெறும் எனக் கொள்க.
அல்லதூஉம், பிறரும் இவ்வாறே சொன்னார். என்னை?
‘உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும்
மறுக்கப் படாத மரபின ஆகியும்
எழுவாய் இடமாய் அடிப்பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே’.1
‘வஞ்சி மருங்கின் இறுதியும் ஆமெனக்
கண்டனர் மாதோ கடனறிந் தோரே.’2
என்றார் காக்கைபாடினியார்.
‘தனியே
அடிமுதற் பொருள்பெற வருவது தனிச்சொல்; அஃ
திறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப’.3
என்றார் அவிநயனார்.
தனிச் சொல்லைக் ‘கூன்’ என்று வழங்குவாரும் உளர் எனக் கொள்க.
என்னை?
‘அடியினிற் பொருளைத் தானினிது கொண்டு
முடிய நிற்பது கூன்என மொழிப’.4
1 - 4 யா. வி. 95 உரைமேற்.
|