தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும், கீழது
முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல’1
என்னும் ஆசிரியத்துள், அடி முதற்கண் ‘வடாஅது’ என உகர ஈறாய்
நேரீற்று இயற்சீர்க் கூன் அருகி வந்தது.
பிறவற்றுள்ளும் வந்தவழிக் கண்டு கொள்க.
வஞ்சி அல்லாப் பாக்கள் அடி இடையும் இறுதியும் கூன் வாராதவாறு
மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க.
[குறள் வெண்பா]
‘அடிமுதற்கண் நான்கிற்கும் சீர்கூனாம்; ஆகும்
இடைகடையும் வஞ்சிக் கசை’.
என்றாரும் உளர்.
95) புறநடை
‘நிரல்நிறை முதலிய பொருள்கோட் பகுதியும்
அறுவகைப் பட்ட சொல்லின் விகாரமும்
எழுத்தல் இசையை அசைபெறுத் தியற்றலும்
வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும்
அம்மை முதலிய ஆயிரு நான்மையும்
வண்ணமும் பிறவும் மரபுளி வழாமைத்
திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே’.
‘இஃது என் நுதலிற்றோ?’ எனின், மேற்சொல்லப்பட்ட
செய்யுட்கட்கெல்லாம் எய்தியதோர் புறநடை இலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.
இதன் பொழிப்பு : நிரல்நிறை முதலாகிய பொருள்கோளும்,
அறுவகைப்பட்ட சொல்லினது விகாரமும், எழுத்து அல்லாத கிளவியை
அசைபெறுத்து இயற்றலும், வகையுளி சேர்த்தலும், அம்மை முதலாகிய எட்டு
யாப்பலங்காரமும், வண்ணங்களும், மற்றொழிந்தனவும் வரலாற்று
முறைமையோடும் பொருந்த நடாத்துதல் புலவர் கடன் [என்றவாறு].
1. புறம். 6:1-6
|