பக்கம் எண் :
 

 484                                   யாப்பருங்கல விருத்தி

 கலி நிலம் எட்டினுள்ளும் வெண்டளை தட்ப எட்டும், ஆசிரியத் தளை தட்ப  எட்டுமாய், கலிப்பாவிற்குப் பதினாறு தளை வழுவாம்.

 என்னை?

     ‘அளவிரு நிலத்தொடு நெடில்கழி நெடிலெ
     விரவும் இருநான் கெய்திய கலியினுள்
     மரபே வெள்ளை ஆசிரி யத்தளை
     வரினும் வழுவகை ஈரெட் டாகும்’.

 என்றாராகலின்.

[குறள் வெண்பா]

     ‘மூன்றிற்கும் சொன்ன முறையால் தொகுத்துணரத்
     தோன்றும் வழுவெழுப தாம்’.

 இவை எழுபது தளை வழுவாவன.

 இனி, அறுநூற்று இருபத்தைந்து அடியும் காட்டுமிடத்துச் சீர் வரையறுக்கின்றுழிக் குற்றுகர இகரங்களை ஒற்றாகக் கொண்டு, முற்றுகர இகரங்களை எழுத்தாகக் கொண்டு வழங்கப்படும்.

[நேரிசை வெண்பா]

     ‘குற்றுகரத் தோடு வருஞ்சீர் எழுத்தைந்தும்
     முற்றுகர முற்றசீ ராமென்ப - தெற்றெனக்
     குற்றிகரத் தோடு வருஞ்சீர் எழுத்தைந்தும்
     முற்றிகர முற்றசீ ராம்’.

 என்றாராகலின்.

 ஆசிரியப்பாவிற்கு உரிய இருநூற்று அறுபத்தோரடியும் ஆமாறு சொல்லுமிடத்து, ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் பதினாறாம்; இயற்சீர் பத்தும், தன் சீர் ஆறும் என, அவற்றுள் தன் சீர் ஆறும் தளை வகுக்கப்படாமையின் ஆறும் கொள்ளப்படா.

 என்னை?

     ‘தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா’.1

 என்றாராகலின்,


  1 தொல். பொ. 367.