பக்கம் எண் :
 

 488                                   யாப்பருங்கல விருத்தி

[குறள் வெண்பா]

     ‘எடுத்துரைத்த மூவெழுத்துச் சீரினான் ஆய
     அடித்தொகை எண்பத்தெட் டாம்’.

 என்பவாகலின்.

    இனி, நாலெழுத்துச் சீராவன ஐந்து வகைப்படும். ‘அவை யாவையோ?’ எனின், ‘கணவிரி, பூமருது, கடியாறு, விறகுதீ, மழகளிறு’ என இவை.

     என்னை?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘கணவிரி பூமருது கார்க்கடி யாறு
     விறகுதீ நான்கெழுத்தும் ஆகும்;- குறைவில்
     மழகளிறும் அன்ன தகைத்து’.

 என்பவாகலின்.

    அவற்றுள், பூமருது ஏழெழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த பதின்மூன்று அடியும் பெற, பதின்மூன்றேயாம்.

     என்னை?

[குறள் வெண்பா]

     ‘பூமரு தேழாதி பத்தொன்பான் காறுயர
     ஆகும் அடிபதின்மூன் றாம்’.

 என்பவாகலின்.

    ஒழிந்த ‘கணவிரி, கடியாறு, மழகளிறு, விறகுதீ’ என்னும் நான்கு சீரும்  எட்டெழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற, நான்குமாய் நாற்பத்தெட்டு அடியாம்.

 என்னை?

[குறள் வெண்பா]

     ‘ஒழிந்தநான் கெட்டாதி பத்தொன்பான் காறும்
     மொழிந்த அடிநாற்பத் தெட்டு’.

 என்பவாகலின்.