கைவல் மகடூஉ தனது செய்கை நலம் தோன்ற மாண்பினால் ஓர்
இழைப்படுத்தல் அன்றே உலகத்து நூல் நூற்றலாவது? அவ்வாறே, சுகிர்ந்து
பரந்த சொற்பரவைகளால் பெரும் புலவன் தனது உணர்வு மாட்சியிற்
சூத்திரம் ஓத்து, படலம், பிண்டம் என்னும் யாப்பு நடைபடக்
கோத்தலாயிற்று. நூல் செய்தலாவது. அவ்வகை நூற்கப் படுதலின்,
நூலெனப்படும்.
இனி, நூலாற் பயன் உரைக்குமாறு: நூல் கேட்டு விளங்கிய
நுண்ணுணர்வினோன், அபாயம் இல்லாததோர் உபாயத்தினால் அறம்,
பொருள், இன்பம், வீடு என இவற்றை நிரம்புமாறு அறிந்து நிகழ்த்துவானாம்.
அதனாற் பகரப் பட்ட நான்கினையும் பாரம்பரத்தால் பனுவலே
பயப்பதாயிற்று எனக் கொள்க.
எழுத்து; (தொகை, வகை, விரி)
இனி, நூல் நுதலியது உரைக்குமாறு: சிறப்பெழுத்து, உறுப்பெழுத்து
என்னும் தொகையானும்; ஒற்று, உயிர், உயிர்மெய் என்னும் வகையானும்,
உயிரும், மெய்யும், உயிர்மெய்யும், குறிலும், நெடிலும், அளபெடையும
வன்மையும், மென்மையும், இடைமையும், குற்றியலி கரமும், குற்றியலுகரமும்,
ஆய்தமும், ஐகாரக் குறுக்கமும், ஒளகாரக் குறுக்கமும், மகரக் குறுக்கமும்
என்னும் விரியானும்;
அசை, (தொகை, வகை, விரி).
நேரசை, நிரையசை என்னும் தொகையானும்; நேரசை, நிரையசை,
நேர்பசை, நிரைபசை என்னும் வகையானும்; சிறப்புடை நேரசை, சிறப்பில்
நேரசை, சிறப்புடை நிரையசை, சிறப்பில் நிரையசை, சிறப்புடை நேர்பசை,
சிறப்பில் நேர்பசை, சிறப்புடை நிரைபசை, சிறப்பில் நிரைபசை என்னும்
விரியானும்;
சீர்; (தொகை, வகை, விரி).
இயற்சீர், உரிச்சீர், பொதுச்சீர், என்னும் தொகை யானும்; நேரீற்றியற்சீர்,
நிரையீற்றியற்சீர், நேரீற்றுரிச்சீர், நிரையீற்றுரிச்சீர், நேரீற்றுப் பொதுச்சீர்,
நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் வகையானும்; சிறப்புடை நேரீற்றியற்சீர்,
சிறப்பில்
|