பக்கம் எண் :
 

 510                                    யாப்பருங்கல விருத்தி

[தரவு கொச்சகம்]

      ‘யதிகணம் இருநிலம் இறைவனோ டிமையோர்
      துதிதிகழ் மொழியிசை துதைமதில் உடையேம்
      அதிபதி அடியிணை அடைகுவம் எழுநாம்
      மதிபுரை திருமுக மடநடை மயிலே’.

 இது பதினைந்தெழுத்தடி அளவியற்சந்தம்.

[கட்டளைக் கலித்துறை]

      ‘மாவரு கானல் வரையதர்ப் பாங்கர் மலிகுரவின்
      பூமலி சோலைத் திருவருங் காண்பர் புதுமதுநீர்த்
      தாமரை வாவித் தடமலர் சாடிக் கயலுகளக்
      காமரு நீலம் கனையிருள் காலும் கழனிகளே’.

 இது பதினாறெழுத்தடி அளவியற்சந்தம்.

[எழுசீர் விருத்தம்]

      ‘கோலக் கொன்றைக் கொழுநன் எழிலார் கொம்பன தோளை நாளும்
      சாலப் புல்லித் தளவ மடவாள் தானகத் தோகை எல்லாம்
      ஆலக் கொண்மூ அதிரும் இதுகாண் ஆய்மலர்க் கோதை நல்லாய்
      காலச் செவ்வேற் கனகக் கடகக் காதலர் சொன்ன ஆறே’.

 எனவும்,

[கட்டளைக் கலித்துறை]

      ‘செருவிளை வைவேல் திகழொளி வேந்தர் திருமுடிமேல்
      உருவிளை ஒண்போ துறுநின பாதங் குறைவறியாக்
      கருவிளை யாட்டும் கவினுடை வாட்கட் கனிபுரைவாய்த்
      திருவிளை யாடும் கனவரை யாகச் சினவரனே’.

 எனவும் இவை பதினேழெழுத்தடி அளவியற்சந்தம்.

[அறுசீர் விருத்தம்]

      ‘பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
      பணியாய் மணியார் அணைமேல் பணியா வொருமூ வுலகும்
      கணியா துணரும் கவினார் கலைமா மடவாள் கணவா!
      அணியார் கமலத் தலரா சனனே! அறவா ழியனே!’

 இது பதினெட்டெழுத்தடி அளவியற்சந்தம்.