|
முதலாகிய சாதியும்; ஆரிடமும், பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும்;
பிங்கலமும், மாபிங்கலமும், சயதேவமும், ஞானா சாரியமும், சந்திரகோடிச்
சந்தமும், மயூரத் திரிசந்தமும், மேடகத் திரிசந்தமும் முதலாகிய
சந்தோபிசிதிகளுள்ளும்; பாட்டியல் மரபு, மாபுராணம் முதலாகிய தமிழ்
நூலுள்ளும் பகுதியுடையார்வாய்க் கேட்டுக் கொள்க. அவை ஈண்டு
உரைப்பிற் பெருகும்.
சந்தமும் தாண்டகமும் என்ற இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றுழிக்
குற்றுகர இகரங்களை எழுத்தாகவே கொண்டு எண்ணுக.
இனி, காக்கை பாடினியாரும், பாட்டியல் உடையாரும், வாய்ப்பியம்
உடையாரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர், இவற்றையும்
இனத்தின்பாற்படுத்து வழங்குவர். தொல்காப்பியனார் முதலாகிய ஒருசார்
ஆசிரியர், இவற்றையும் மேற்கூறப்பட்ட பாவினங்களையும் கொச்சகக்
கலிப்பாவிற்படுத்து வழங்குவர் எனக் கொள்க.
இனி, ஒருசார் வடநூல்வழித் தமிழாசிரியர், ‘ஒருபுடை ஒப்புமை
நோக்கி இனமெனப்படா; மூவகைப்பட்ட விருத்தங்களுள்ளும், சந்தத்
தாண்டகங்களுள்ளுமே பட்டு அடங்கும்’ என்பர். இந்நூலுடையார், காக்கை
பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மதம் பற்றி எடுத்து ஓதி,
இவையும் உடன் பட்டாரெனக் கொள்க.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘ஒருபுடையால் ஒப்புரைப்பின் மற்றுமோர் பாவிற்
கொருபுடையால் ஒக்குமா றுண்டாம்; - இருபுடையும்
ஒப்பித்துக் கோடுமோ, ஒன்றிற்கே சார்த்துதுமோ,
எப்பெற்றிக் கோடும் இனம்?’
இது கடா.
[கலி விருத்தம்]
‘குன்றி ஏய்க்கும் உடுக்கையென் றாற்கரி
தொன்றுமோ, சிவப் பென்றுமோ, அவ்விரண்
டொன்றி நின்றவென் றோதுது மோ?’ எனின்,
நின்ற தோர்வர லாற்றோடு நிற்குமே.’
|