|
[குறள் வெண்பா]
‘ஐந்தாதி ஐயிரண் டீறாம் அறுநிலமும்
வந்தவடி வெள்ளைக் களவு.’
[நேரிசை வெண்பா]
‘பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா
வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின்
ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்
பாற்படுத்தார் நூலோர் பயின்று.’
இவற்றின் கருத்து: ‘நாலெழுத்து முதலாகிய மூன்றும் குறளடி;
ஏழெழுத்து முதலாகிய மூன்றும் சிந்தடி; பத்தெழுத்து முதலாகிய ஐந்தும்
அளவடி; பதினைந்தெழுத்து முதலாகிய மூன்றும் நெடிலடி;
பதினெட்டெழுத்து முதலாகிய மூன்றும் கழிநெடிலடி.
‘அவற்றுள் ஐந்தடியாலும் ஆசிரியம் வரப்பெறும். சிந்தடி
மூன்றடியாலும், அளவடியாலும், நெடிலடியின் முதல் இரண்டடியாலும்
வெண்பா வரப்பெறும். வெண்பாவின் ஈற்றடி, ஐந்தெழுத்து முதலாகப்
பத்தெழுத்தின் காறும் உயர்ந்த ஆறு நிலத்தானும் வரப்பெறும். பதின்
மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டு நிலத்தானும்
இலக்கணக் கலிப்பா வரப்பெறும். இலக்கணக் கலிப்பா அல்லாதன, மிக்கும்
குறைந்தும் வரப்பெறும். இருசீரடி வஞ்சிப்பா நான்கெழுத்து முதலாகப்
பன்னீரெழுத்தின்காறும் உயர்ந்த ஒன்பது நிலத்தானும் வரப்பெறும். முச்சீரடி
வஞ்சிக்கு எழுத்து எண்ணி வகுத்திலரேனும், ஏழெழுத்து முதலாகப்
பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும்.
முச்சீரடியெல்லாம் ஒரு நிலமாகக் கொண்டு, இரு சீரடி வஞ்சி நிலம்
ஒன்பதோடும் கூட்டி, வஞ்சி நிலம் பத்து என்ப. அல்லாது இருபது
எழுத்தின் மிக்கு வரும் நாற்சீரடிப்பா இல்லை. நாற்சீரடிப் பாவினங்களின்
அடி இருபது எழுத்தின் மிக்கு. இருபத்து நான்கு எழுத்தின்காறும்
வரப்பெறும்,’ என்பது.
வெண்பா ஆசிரியங்களுள்ளும் இலக்கணக் கலிப்பாவினுள்ளும் வரும்
சீர் ஐந்தெழுத்தின் மிகப்பெறா. வஞ்சியுள் வரும் சீர் ஆறு எழுத்து ஆகவும்
பெறும்; சிறுமை மூன்று
|