பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           551

     இவை முதலிரண்டடியும் எழுத்து மிக்கு, கடையிரண்டடியும் எழுத்துக் குறைந்து, நான்கடியும் சீர் ஒத்து வந்தமையால், பாதிச் சமச் செய்யுள்.

[கலி விருத்தம்]

     ‘அடிமிசை அரசர்கள் வணங்க ஆண்டவன்                    (14)
     பொடிமிசை யப்புறம் புரள விப்புறம்                          (13)
     இடிமுர சதிரவொர் இளவல் தன்னொடும்                      (14)
     கடிமணம் புகுமிவள் கற்பின் நீர்மையே’                       (13)

     இது முதலடியும் மூன்றாம் அடியும் எழுத்து மிக்கு, இரண்டாம் அடியும் ஈற்றடியும் எழுத்துக் குறைந்து, நாலடியும் சீர் ஒத்து வந்தமையால், பாதிச் சம விருத்தம்.

[அறுசீர் விருத்தம்]

     ‘மெய்யறி விலாமை என்னும் வித்தினிற் பிறந்து வெய்ய          (16)
     கையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தின    (17)
     மையற வுறைந்து வாடும் வாழுயிர்ப் பிறவ மாலை              (16)
     நெய்யற நிழற்றும் வேலோய்! நினைத்தனை நினைக்க என்றான்.’2  (17)

இது முதலடியும் மூன்றாமடியும் எழுத்துக் குறைந்தும், ஏனை இரண்டடியும் எழுத்து மிக்கும், நான்கடியும் சீர் ஒத்து வந்தமையால், பாதிச் சம விருத்தம்.

     என்னை?

[தரவு கொச்சகம்]

     ‘முடிவிரண்டும் மிக்கும் முதலிரண்டும் நைந்தும்
     முடிவிரண்டும் குன்றி முதலிரண்டும் மிக்கும்
     அடியிடையிட் டஃகியும் மிக்கும் வருமேற்
     படியின்மேற் பாதி்ச் சமவிருத்த மாமே.’

 என்பவாகலின். இதனைப் பதம் நெகிழ்த்து உரைத்துக் கொள்க.


  1. சூளா. முத்தி. 22. 2. சூளா. இரத. 80.
 பி - ம். உருசியும்.