பக்கம் எண் :
 

 ஒழிபு இயல்                                           555

 எனவும் இவற்றுட் கண்டு கொள்க.

[கலி விருத்தம்]

     ‘முன்றில் எங்கும் முருகியப் பாணியும்
     சென்று வீழரு வித்திரள் ஓசையும்
     வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
     ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.’1

 என்னும் சந்தத்து நேரசை முதலாய் வருமடி பதினோரெழுத்து ஆயினவாறு.

     நிரையசை முதலாய் வருமடி, பன்னிரண்டு எழுத்தாம்.

     வரலாறு :

[கலி விருத்தம்]

     ‘அணங்க னாரன ஆடல் முழவமும்
     கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்
     மணங்கொள் வான்முர சும்வயல் ஓதையும்
     இணங்கி எங்கும் இருக்கையந் நாடெல்லாம்.’2

 என இதனுள் நிரையசை முதலாய் வரும் அடி பன்னிரண்டு எழுத்தாய் வந்தவாறு கண்டுகொள்க.

     சிந்தாமணி, சூளாமணி, குண்டல கேசி, நீல கேசி, அமிர்தபதி என்ற இவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவனவற்றில் நேரசை முதலாய் வரின், ஓரடி பதினான்கு எழுத்தாம்; நிரையசை முதலாய் வரின், ஓரடி பதினைந்தெழுத்தாம். பிங்கல கேசியின் முதற் பாட்டு இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்த்தார். அல்லன எல்லாம் ஒக்கும்.

     வரலாறு :

[கலி நிலைத்துறை]

     ‘மூவா முதலா உலகம் ஒருமூன்றும் ஏத்தத்
     தாவாத வின்பம் தலையா யதுதன்னின் எய்தி
     ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப
     தேவாதி தேவன் அவன்சே வடிசேர்தும் அன்றே.’3

 எனவும்,


  1. சூளா. நாட்டுப். 7. 2. சூளா. நாட்டுப். 9. 3. சிந். கட. வாழ்.