பக்கம் எண் :
 

 558                                   யாப்பருங்கல விருத்தி

     இவற்றையெல்லாம் ஞானாசிரியமும், 1 சயதேவமும் மிச்சா கிருதியும், பிங்கலமும், மாபிங்கலமும், இரணமா மஞ்சுடையும், சந்திர கோடிச் சந்தமும், ‘குணகாங்கி’ என்னும் கருநாடகச் சந்தமும், வாஞ்சியார் செய்த வடுகர்சந்தமும் ஆகியவற்றுள்ளும், மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் புகுதியுடையார்வாய்க் கேட்டுக் கொள்க. இவையெல்லாம் விகற்பித்து உரைக்கப் பெருகும்.

     ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர், ‘‘குருவும் இலகுவும் புணர்ந்து முற்றவரினும், முற்றக் குருவேயாயும் முற்ற இலகுவேயாயும் வரினும், ‘சமானம்’ என்பதாம்; இலகுவும் குருவும் புணர்ந்து முறை வரிற் ‘பிரமாணம்’ என்பதாம்; இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வரினும், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும், ‘விதானம்’ என்பதாம்” என்பர்.

     என்னை?

[நேரிசை வெண்பா]

     ‘குருலகுமுற் றாயும் குருவிலகு வேறாய்
     வருமெனினாம் மைதீர் சமானம்; - குருலகுவின்
     பிற்றான் வரிற்பிர மாணம்; விதானமாம்
     என்றார் இரண்டாம் எனின்.’

 என்பவாகலின்.

     வரலாறு:

[கலி விருத்தம்]

     ‘போது விண்ட புண்ட ரீக
     மாத ரோடு வைக வேண்டின்
     ஆதி நாதர் ஆய்ந்த நூலின்
     நீதி ஓதி நின்மின் நீடு.’

 எனவும்,


  பி - ம். * சரணாச்சிரையம்.