|
இனி, காலம் மூவகைய: இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என.
என்னை?
‘இறந்ததும் நிகழ்வதும் எதிர்வதும் என்னும்
திறந்தெரி வுடையன கால மாகும்.’
என்றாராகலின். அன்றியும், நன்னர்க் காலம், நற்காலம்; தீந்தகாலம்,
தீக்காலம்; நற்றீக்காலம், தீத்தீக் காலம் என இவையுமாம். நான்கு யுகமும்
எனினுமாம். இவை ஆமாறு உரைப்பிற் பெருகலின், உலக சமய பேதம்
வல்லார் வாய்க் கேட்டு உணர்க.
இனி, ‘எண் வகை மணம்’ ஆவன: பிரம மணம், விதி மணம், ஆரிட
மணம், தெய்வ மணம், ஆசுர மணம், இராக்கத மணம், பைசாச மணம்,
கந்தருவ மணம் என்பன.
பிரம மணமாவது, ஓர் இருதுக்கண்ட கன்னியை மற்றை இருதுக்
காணாமே கொளற்பால மரபினோர்க்கு நீர் பெய்து கொடுத்தல்.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘ஒப்பாருக் கொப்பார் ஒருபூப் பிரிந்தபின்
இப்பால் மதிதோன்றா எல்லைக்காண் - அப்பால்
தருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்த்தல்
பிரமமாம் போலும் பெயர்.’
என்றாராகலின்.
விதி மணமாவது, கொடுத்த பரியத்தின் இரு மடங்கு மகட்கொடுப்
போன் கொடுத்தல்.
என்னை?
[நேரிசை வெண்பா]
‘கொடுத்த பொருள்வாங்கிக் கொண்ட பொழுது
மடுப்பர் மடுத்தற் கமைந்தால் - அடுப்போன்
இரண்டா மடங்குபெய் தீவ ததுவே
இரண்டாம் மணத்தின் இயல்பு.’
என்றாராகலின்.
|