பக்கம் எண் :
 

 612                                   யாப்பருங்கல விருத்தி

     அந்தரம் இன்றிப் புணர்வ ததுவரோ
     கந்தருவம் என்ற கருத்து.’

 எனவும்,

     ‘முற்செய் வினையது முறையா உண்மையின்,
     ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து
     காட்சி ஐயம் தெரிதல் தேற்றலென
     நான்கிறந் தவட்கு நாணும் மடனும்
     அச்சமும் பயிர்ப்பும் அவற்கும்
     உயிர்த்தகத் தடக்கிய
     அறிவும் நிறையும் ஓர்ப்பும் தேற்றமும்
     மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தில்
     மெய்யுறு வகையுமுள் ளல்ல துடம்படாத்
     தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய
     களவெனப் படுவது கந்தருவ மணமே.’

 என்றார் அவிநயனார்.

     இனி, எழுத்து நான்கு வகைய: உருவெழுத்தும், உணர்வெழுத்தும், ஒலியெழுத்தும், தன்மையெழுத்தும் என.

     என்னை?

 ‘அவற்றுள்,

     உருவே உணர்வே ஒலியே தன்மையென
     இருவகை எழுத்தும் ஈரிரண் டாகும்.’

 என்றாராகலின்.

 அவற்றுள் உருவெழுத்தாவது, எழுதப்படுவது.

 என்னை?

     ‘காணப் பட்ட உருவம் எல்லாம்
     மாணக் காட்டும் வகைமை நாடி
     வழுவில் ஓவியன் கைவினை போல
     எழுதப் படுவ துருவெழுத் தாகும்.’

 என்றாராகலின்.

 உணர்வெழுத்தாவது,

     ‘கொண்டவோர் குறியாற் கொண்ட அதனை
     உண்டென் றுணர்வ துணர்வெழுத் தாகும்.’