பக்கம் எண் :
 

 614                                   யாப்பருங்கல விருத்தி

     ‘மருவிய சொல்லொடு மருவாச் சொற்கொணர்ந்
     துரிமையொ டியற்றுவ துரிச்சொல் ஆகும்.’

 என்பன வாய்ப்பியம்.

     இனி, ஒருசார் ஆசிரியர், இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்றும் உரைப்பர்.

     அவற்றுள் திரிசொற் சில வருமாறு:

     ‘பைஞ்ஞீலம் பைதிரம் விரற்றலை யோர்பித்தை
     பூழிலவம் பீளைதுருவையனல் தொடுப்பகை பிறடி
     கருவுள நவிரல் வசிதலையல் நிவப்புச்
     செப்பிய பிறவும் திரிசொல் ஆகும்.’

     ஆடு, எருது, விடை, ஏறு, மோத்தை, சேவல், ஒருத்தல், கலை, களிறு, ஏற்றை, கடுவன், கூரன், பகடு என இவை ஆண் பெயர்.

     மகடு, ஆ, பிடி, குமரி, கன்னி, பிணவு, முடுவல் என்ற இன்னவை பெண் பெயர்.

     குழவி, மகவு, மறி, குருளை என்ற இன்னவை இளமைக்கு எய்திய பெயர்.

     ‘பெயரிவை மும்மையும் பிறவுமிப் பொருட்கண்
     இயைபெதிர் இயலும் என்றுணர்ந் தியையக்
     குறியொடு காரணம் கொளவகுத் தொழிந்த
     தறிய வுரைப்போன் ஆசிரி யன்னே.’

 என இவற்றின் விரிவறிந்து வந்துழிக் காண்க.

 இடைச் சொல்லும் உரிச் சொல்லும் தொல்காப்பியம், தக்காணியம், அவிநயம், நல்லாறன் மொழி வரி முதலியவற்றுட் காண்க.

     இனி, ‘செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும்’ ஆமாறு: ‘நாற்பெரும் பண்ணும், இருபத்தொரு திறனும் ஆகிய இசையெல்லாம் செந்துறை; ஒன்பது மேற்புறமும், பதினோராடலும் என்ற இவையெல்லாம் வெண்டுறை யாகும்’ என்பது வாய்ப்பியம்.

     இனி, ஒரு சார் ஆசிரியர் சொல்லுமாறு:

     ‘கந்தருவம் என்பது கசடறக் கிளப்பினற்
     செந்துறை வெண்டுறை எனவிரு வகைத்தே.’