பக்கம் எண் :
 

 618                                   யாப்பருங்கல விருத்தி

     செந்துறை வெண்டுறைப் பாட்டாவன, தெய்வதமும், பாவையும், வானூர் மதியமும், இலங்கிரும், வைளவமும், ஒன்று கொட்டும், முருட்டும் என்ற இத் தொடக்கத்து மேற்புறச் செய்யுள் எனக் கொள்க.

     என்னை?

     ‘தேவ பாணி முதலா ஏவிய ஒன்றீ றாகக் கிடந்தவும் வந்த இலங்கிரு வைளவம் வானூர் மதியம் என்றிம் மொழிந்த மேற்புறம் எல்லாம் செந்துறை வெண்டுறை சேர்த்துங் காலே.’

 என்றாராகலின்.

     இனி, முப்பத்திரு வகை உத்தியாவன,1 முன் கூறியவே.

     தருக்கமாவன, ஏகாந்த வாதமும், அநேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம் பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும்; சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க.

     இனி, நடச் செய்யுளாவன,

     ‘வரியே குரவை மதலை மேடம் முரியே தாழிசை முன்னிலை வாழ்ந்தே தேவ பாணி சிற்றிசை நேரிசை பாவை தனிநிலை பாங்கமை மடலே.’

 என்று ஓதப்பட்டன. அவை இன்மணியாரத்துள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க.

     ‘முந்துநூல் முடித்த முறைமையின் வழாஅமை வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன் அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே.’

 என்பது, மேல் நூல் முடிந்த முறைமையின் வழாமைச் சொன்னவும், சித்திர சமைய பத்திர சேதக கணித கத்தவுத்தி முதலிய பிறவும் அறிந்து இடத்திற்கு ஏற்ற வாற்றான் உரைக்க வல்லோன் கேள்வி முற்றிய ஆசிரியன் என்று கூறப்படுவான் (என்றவாறு).


  1. யா. வி. 95 உரைமேற்கோள் நோக்குக.