பக்கம் எண் :
 

 66                                    யாப்பருங்கல விருத்தி

 எனவும் கொள்க.

     ‘இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின்
     உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.’3

 எனத் தொல்காப்பியனார் ‘வெண்பா உரிச்சீர்’ என்றதனை மொழி மாற்றி ‘உரிச்சீர் வெண்பா’ என்றார். அதுபோலக்கொள்க.

     நேரீறாகிய மூவசைச்சீர் நான்கும் பெரும்பான்மையும் வெண்பாவுக்கே உரிமை பூண்டு நிற்றலின், ‘வெண்பா உரிச்சீர்’ என்பதூஉம் காரணக்குறி; நிரையீறாகிய மூவசைச் சீர் நான்கும் பெரும்பான்மையும் வஞ்சிப்பாவிற்கே உரிமை பூண்டமையின், ‘வஞ்சி உரிச்சீர்’ என்பதூஉம் காரணக்குறி. என்ன?

     ‘மூவசை யான்முடி வெய்திய எட்டனுள்
     அந்தம் தனியசை வெள்ளை; அல்லன
     வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே.’

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘ஈரசை யாக மூவசைச் சீர்தான்
     நேரிறின் வெள்ளை; நிரையிறின் வஞ்சி.’

 என்றார் அவிநயனார்.

13) பொதுச்சீரின் திறமும் தொகையும்

     நாலசைச் சீர்பொதுச் சீர்பதி னாறே.

 ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், நிறுத்த முறையானே ‘பொதுச்சீர்’ ஆமாறும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள்: நாலசைச்சீர் பொதுச்சீர் - நாலசையானாகிய சீர் பொதுச்சீர்’ எனப்படும்; பதினாறே - (அவைதாம்) பதினாறு திறந்தன (என்றவாறு).

     அவற்றுள் நேர் இறுதி எட்டும், நிரை இறுதி எட்டுமாம். என்னை?


  அந்தம் - இறுதி; தனியசை - நேரசை (இணையசை - நிரையசை); கிழமை - உரிமை; வெள்ளை - வெண்பா.

  ஈரசையாக - நேரசையும் நிரையசையுமாக.

  நிறுத்த முறை - (சூத்திரம் 10ல்) நிறுத்திய முறை.