பக்கம் எண் :
 

 70                                    யாப்பருங்கல விருத்தி

     ‘அசையே இரண்டும் மூன்றும் தம்முள்
     இசையே வருவன சீரெனப் படுமே;
     ஈரிரண்டாகியும் ஒரோவிடத் தியலும்.’

 என்றார் பல்காயனார்.

     ‘நாலசை யானும் நடைபெறும்; ஓரசை
     சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே.’

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘நாலசைச் சீரும் ஒரோவிடத் தியலும்
     பாவொடு பாவினம் பயிறல் இன்றி.’

 என்றார் அவிநயனார்.

 14)ஓரசைச்சீரின் பெயரும் வகையும்

 ஓரசைச் சீருமஃதோரிரு வகைத்தே.

 ‘என்பது என் நுதலிற்றோ?’ எனின், ‘ஓரசையினால் ஆகிய சீரும் பொதுச்சீர்’ என்று எய்துவித்தலும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள் : ஓர் அசைச்சீரும் அஃது - ஓர் அசையினான் ஆகிய சீரும் ‘அஃது’ என்று மாட்டெறிந்தமையின் பொதுச்சீராம்; ஓர் இரு வகைத்தே - அது நேரசைச் சீரும் நிரையசைச் சீரும் என இரண்டு வகைப் படும் (என்றவாறு).

     (உம்.) நாள், மலர் என்பன.

     இவை ஓரசைச்சீருக்கு உதாரணம் உரைத்தது, வெண்பாவின் இறுதி ஓசை ஊட்டுதற்பொருட்டு.

     அவற்றிற்குச் செய்யுள்:

     ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
     வாலெயி றூறிய நீர்.’1

 எனவும்,


  1 குறள். 1121.

  குறிப்பு : பயிறல் இன்றி - கண்ணுற நிற்றல் இல்லாமல்; மாட்டெறிதல் - ஒரு சூத்திரத்திற் கூறிய விதியை அதனை ஒத்த சூத்திரங்கட்கும் இணைத்துக் கொள்ளும் ஓர் உத்தி (நன் சூ. 14).