வேண்டியது முடித்தற்கு . மற்றும் வேண்டியது யாதோ ? எனின் , இவ்வலங்காரம் பிற அலங்காரங்களோடு கூடி வருவன கோடற்கு என்பது . என்னை ? 'விலக்கியல் சிலேடையின் மேவவும் பெறுமே ' என்றலின் , அவை வருமாறு: -
வி-ரை: மேற்காட்டின என்பது ஒரு பொருள் வேற்றுமைச்சமம் , இருபொருள் வேற்றுமைச்சமம் , உயர்ச்சி வேற்றுமை ஆகிய மூன்றுமாம் . அம்மூன்றிலேயே இங்குக் கூறப்படும் குணம் , பொருள் சாதி , தொழில் வேற்றுமைகள் நான்கும் அடங்கும் . அங்ஙனமாக இந்நூற்பா வேண்டாது கூறியதேயாகும் . அதனால் பயன் என்னை ? எனில் , இவ்வேற்றுமையணி விலக்கு , சிலேடை என்ற அணிகளுடனும் கூடிவரும் என்பதற்காம்.
1 . விலக்கியல் வேற்றுமை
எ- டு: ' தம்மால் பயன்றூக்கா தியாவரையுந் தாங்கினும்
கைம்மாறுங் காலம் உடைத்தன்றே - எம்மாவி
அன்னவனை யாழி யனபா யனை 1யலராள்
மன்னவனை மானுமோ வான் '
(இ-ள்) உலகத்தாரால் பயனை விரும்பாது யாவரையும் தாங்கினும் மேகம் கைம்மாறுங் கால வரைவுடைத்து ; ஆதலால் , கைம்மாறுங் காலவரையின்றிக் கொடுக்கின்ற எம்முடைய உயிரை ஒத்தவனை , அனபாயனைத் திருமகளுக்கு நாயகனை மேகம் ஒக்குமோ ? எ-று.
இரப்போரிடத்துப் பேறு ஓராது யாவர்க்கும் கொடுப்பினும் அனபாயன் கை மாறாது ; மேகம் இப்படிக் கொடுத்துக் கை மாறும் . ஆகலான் , அனபாயன் கையை மேகம் ஒவ்வாது என்க . 'தம்மாற் பயன் தூக்காது ' என்பதற்குக் கொடையாற் பெறும் பேறு ஓராது எனினும் அமையும்.
வி-ரை: வேற்றுமையணி விலக்கணியோடு கூடிவரின் அது விலக்கியல் வேற்றுமையாம்.
இப்பாடற்கண் கூறப்படும் பொருள் சோழனும் மேகமும் ஆகும் . முதலடியில் இவ்விரண்டற்கும் உள்ள ஒப்புமையைக் கூறி , இரண்டாமடியில் மேகம் கால வரையறை யுடையது என்பதால் , சோழன் கால வரையறை யின்றி வழங்குபவன் என வேற்றுமை கூறி யிருத்தலின் , இது வேற்றுமை யாயிற்று . பின்னிரண்டடிகளில் இவ்வாற்றான் சோழனுக்கு மேகம் ஒப்பாகாது என விலக்கப்பட்டிருத்தலின் விலக்கணியும் ஆயிற்று.
2. சிலேடை வேற்றுமை
எ - டு : ' ஏறடர்த்து வில்முருக்கி எவ்வுலகுங் கைக்கொண்டு
மாறடர்த்த வாழி வலவனைக் - கால்தொழுதற்(கு)
எஞ்சினா ரில்லெனினு மாய னிகனெடுமால்
வஞ்சியா னீர்நாட்டார் மன் '
இ-ள்: விடைதழுவி , வில்லிறுத்து , மூன்றுலகும் அளந்து கைக்கொண்டு , பகைஞரைத் தொலைத்த சக்கரத்தை யுடைய மாலை , உலகத்துள்ளார் யாவரும் வணங்குவார் எனினும் மாயன்
1. 'மலராள் ' என்பதும் பாடம்.