பக்கம் எண் :
 
114தண்டியலங்காரம்

தமியோர் - தனியிருந்தோர். மஞ்ஞை-மயில். தூங்கல்-ஆடல், வாயிலார்- ஊடல் தீர்ப்பார். கன்றல்- கறுத்தல். சிலை - வில், இந்திரதனு. கார் - கார்காலம்.

வி-ரை,இ-ள்: துணையின்றித் தனித்திருப்போருடைய மனம் நெருப்பில்லாமலே வேகும்; செழிப்பான கள்ளை யுண்ணாமலேயே மயில்கள் மகிழ்ச்சியோடிருக்கும்; ஊடல் தீர்ப்பதற்குரிய வாயில்கள் இல்லாமலேயே சில பெண்கள் ஊடல் தீர்ந்தனர்; மேகம் யாரொடும் மாறுபாடு கொள்ளாமலேயே கோபித்துஇந்திரவில்லை வளைக்கும் என்பதாம்.

வேதற்குத் தீயும். மகிழ்தற்குத் தேறலும், ஊடல் தீர்தற்கு வாயிலும், வில் வளைத்தற்கு மாறுபாடும் இன்றியமையாத காரணங்கள். இவை உலகறி காரணங்கள். எனினும், இவையின்றியே அவ்வச் செயல்கள் நிகழ்ந்தன என்பதால் விபாவனை ஆயிற்று. இங்ஙனம் கூறவே இவற்றிற்குக் காரணம் `கார் காலம்' என்பது உயர்த்துணர்ந்து கொள்ளப்படுதலின் இது அயற்காரணமாயிற்று

2. 1இயல்பு விபாவனை

எ-டு: 'கடையாமே கூர்த்த கருநெடுங்கண் தேடிப்
படையாமே ஏய்ந்ததனம் பாவாய்! - கடைஞெமிரக்
கோட்டாமே கோடும் புருவங் குலிகச்சே(று)
ஆட்டாமே சேந்த வடி'

குலிகம் - சாதிலிங்கம். சேறு- குழம்பு. சேத்தல் - சிவத்தல்.

வி-ரை, இ-ள்: பெண்ணே! நின்னுடைய கண்கள் எவரும் கடை தலின்றியே கூர்மையாய் உள்ளன, தனங்கள் தேடிப் படைக்காமலேயே பொருந்த அமைந்துள்ளன, அடிகள் சாதிலிங்கக் குழம்பு பூசப்படாமலேயே சிவந்துள்ளன என்பதாம்.

கூர்மையாதற்குக் கடைதலும், தனம் பெருக அமைதற்குத் தேடிப் படைத்தலும், வளைதற்குப் பிறரால் வளைக்கப்படுதலும், சிவத்தற்க்குக் குலிக சேறு ஆட்டுதலும் உலகறிந்த காரணங்கள்ஆகும், ஈண்டு அவையின்றியே அவ்வச் செயல்கள் இயல்பாக விளைந்தன எனக் குறிப்பாக அறியப்படுதலின் இது இயல்பு விபாவனை ஆயிற்று.

'விபாவனை என்னாது 'ஆகும்' என்றதனால், வினையெதிர் மறுத்து பொருள் புலப்படுப்பினும், பொதுவகையாற் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுப்பினும் அவ்வலங்காரமாம் என்க.

அவற்றுள்,

1. வினையெதிர் மறுத்துப் பொருள்புலப்படுப்பது

எ-டு: 'பூட்டாத விற்குனித்துப் பொங்கு முகிலெங்கும்
தீட்டாத அம்பு சிதறுமால் - ஈட்டமாய்க்
காணாத கண்பரப்புந் தோகை கடும்பழிக்கு
நாணா(து) அயர்த்தார் நமர்.

பூட்டாதவில் - வானவில். பூட்டும் வில் - மக்கள் கை வில். தீட்டாத அம்பு - மழைத்துளி. தீட்டும் அம்பு - கணை. காணாத கண் - பீலிக்கண் காணும் கண் - மக்கள் கண். அயர்த்தல் - மறத்தல்.


1, 'குறிப்புக்காரண விபாவனை என்பதும் பாடம்.